மின்னாளுமை கொள்கை முதல்வர் வெளியீடு
தமிழக அரசின் மின்னாளுமை கொள்கையை, நேற்று சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். அமைச்சர் மணிகண்டன் பெற்றுக் கொண்டார்.
அரசுத் துறைகளில், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பொது மக்களுக்கு, அவர்களின் இருப்பிடம் அருகிலேயே, அரசின் சேவைகள் வழங்குவதை உறுதி செய்ய, 'மின்னாளுமைக் கொள்கை - 2017' வெளியிடப்பட்டுள்ளது. இக்கொள்கை, 2023க்குள் அரசின் சேவைகள் அனைத்தையும், இணையம் வழியாக வழங்குதல்; பொது சேவை மையங்கள் மற்றும், 'மொபைல் ஆப்ஸ்' வழியாக, அரசின் சேவைகளை பெற வழி செய்தல்; அரசின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல் திறனை அதிகரித்தல் ஆகியவற்றை, தொலைநோக்கு பார்வையாகக் கொண்டுள்ளது.
மேலும், அரசுத் துறைகளின் மின்னாளுமை சிறப்பு முயற்சிகளுக்கு என உருவாக்கப்பட்டுள்ள, விரிவான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை, சீரான முறையில் பயன்படுத்த, வழிகாட்டுதலையும் வழங்கும்.
அரசுத் துறைகள், தங்களுடைய ஆண்டு நிதி ஒதுக்கீட்டில், முதல் கட்டமாக, 0.5 சதவீதத்தை, மின்னாளுமை திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யவும், பின் படிப்படியாக, அதை, ஐந்து ஆண்டுகளுக்குள், மூன்று சதவீதமாக அதிகரித்திடவும், இக்கொள்கை வழிவகை செய்கிறது.