அரசு பள்ளியில் ஓர் இணைய வித்தகர்
ஆசிரியர் - வருமானத்துக்காக உழைப்பதில்லை; மாணவர்களின் வருங்காலத்துக்காக உழைக்கிறார்.
கல்வி, வழக்கமான முறையில் கற்பிக்கப்படாமல் வகுப்பறையைத் தாண்டியும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர் ஸ்ரீ.திலீப். தகவல் மற்றும் கணினி தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக ஐ.சி.டி. தேசிய நல்லாசிரியர் விருது, மைக்ரோசாப்ட்டின் புதுமையான, தலைமைத்துவ கல்வியாளர் விருது, எல்காட்டின் சிறந்த தொழில்நுட்ப ஆசிரியர் விருது மற்றும் ஏராளமான தேசிய, மாநில, ஊரக விருதுகள், பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர். பள்ளிக் கல்விக்கென ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, சமூக ஊடகங்களில் பல்வேறு குழுக்களை நிர்வகித்து வருகிறார்.
இவரின் பயணம் எங்கே ஆரம்பித்தது?
1936-ல் என்னுடைய தாத்தா ஒரு பள்ளியை ஆரம்பித்தார். அடிப்படையில் அவர் விவசாயி என்றாலும் கல்விதான் எல்லோருக்கும் அடிப்படை என்பதில் உறுதியாக இருந்தவர். பள்ளி விடுமுறைகளில் அந்தப் பள்ளிக்குச் செல்வேன். பொறியியல் படித்து தொழில்நுட்பத்தில் சாதிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது. தாத்தாவின் ஆசையால்தான் நான் ஆசிரியராக மாறினேன். என்னுடைய தொழில்நுட்ப ஆர்வத்தைத் தேங்கவிடாமல், பள்ளிக்கல்வியில் அதைப் புகுத்தியதால்தான் வெற்றி என்னைத் தேடி வந்தது.
முதன்முதலாக, 2000-ம் ஆண்டில் பெரிய நொளம்பை என்னும் இடத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். வீட்டில் இருந்து 60 கி.மீ. தொலைவில் பள்ளி இருந்தது. மூன்று பேருந்துகள் மாறி, அங்கிருந்து 3 கி.மீ. நடந்து போக வேண்டியிருந்தது. பள்ளியில் விளையாட்டு வழிக் கல்வியில் குழந்தைகள் அதிக ஆர்வத்துடன் இருந்தனர். இரும்பு கரும்பலகையில் அ, ஆ என எழுதி பந்தால் அதை அடிக்கச் செய்து எழுத்துகளைக் கற்றுக்கொடுத்தேன். நாளடைவில் விளையாட்டு, பாடல், நடனங்களில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
விட்டுக்கொடுக்காத தென்பாலை பள்ளி
சில ஆண்டுகளில் தென்பாலை என்ற ஊருக்கு மாறுதல் ஆனது. என்னுடைய நண்பர்கள் இருவர் அங்கே வேலை பார்த்தனர். இளைஞர்கள் ஆதலால் மூன்று பேரும் போட்டி போட்டு வேலை பார்த்தோம். ஒரு முறை, மாதச் சம்பளமான 4,500 ரூபாயில் ஆளுக்கு 4,000 போட்டு 12,000 ரூபாயில் சுற்றுச் சுவர் எழுப்பினோம். மாணவர்களை மாவட்டத்தில் நடக்கும் அனைத்து போட்டிகளுக்கும் அழைத்துப் போனோம். சுற்றுவட்டாரத்தில், 'தென்பாலை பள்ளியா, அவர்கள் வந்தால் ஒரு பரிசைக்கூட விட்டுச் செல்ல மாட்டார்கள்' என்ற பெயர் ஏற்பட்டது. எங்கள் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவன் விக்னேஷ், தமிழக மின்சார சேமிப்புக் கழகத்தில் நடத்தப்பட்ட 'மின்சார சேமிப்பு' என்னும் செயல்திட்டத்தில் சிறந்த 50 மாணவர்களில் ஒருவனாகத் தேர்வானான். அந்த 50 பேரில் விக்னேஷ் மட்டுமே அரசுப் பள்ளி மாணவன்.
2007-ல் ஆங்கில ஆசிரியராக பதவி உயர்வு கிடைத்தது. மேல்பாப்பம்பாடியில் இருந்த அரசு நடுநிலைப்பள்ளியில் 5 வருடங்கள் வேலை பார்த்தேன். கணினி பெரிதாக அறிமுகமாகாத காலகட்டத்தில் மாணவர்களுக்கு அடிப்படைக் கணினியைக் கற்றுக்கொடுத்தேன்.மாணவர்கள் காணொலி மற்றும் பவர்பாயிண்டுகளைத் தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்தார்கள். அதே காலத்தில்தான் எங்கள் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளியான உயர்வு பெற்றது" என்று பெருமிதம் கொள்கிறார்.
மொழியின் படிநிலைகளை அளந்தவர்
பி.ஏ. வரலாறு படித்த ஆசிரியர் திலீப்புக்கு, சமர்ச்சீர்க் கல்விக்கான 4, 5-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்ட ஆசிரியர் குழுவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர், தன்னுடைய வகுப்பறையில் புதுமையான முறையில் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். தன் மாணவர்களுக்கு ஆங்கிலத்தை முழுமையாகக் கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டவர், ஒரு எழுத்து, அதில் தொடங்கும் ஒரு பழத்தின் பெயர், அதில் ஒரு வார்த்தை, ஒரு வாக்கியம், ஒரு பாரா என்று எழுதத் தூண்டினார். இதன் மூலம் மாணவர்களின் உச்சரிப்பு, எழுத்துத் திறமை, மொழியறிவு, சிந்தனை ஆகியவற்றை மேம்பட்டிருக்கிறது. இந்த முறையை அனைவருக்கும் கொண்டு செல்ல ஆசைப்பட்டவர், அனுராதா பதிப்பகம் நடத்திய போட்டி ஒன்றில் 'கற்றல், கற்பித்தலில் புதிய யுக்திகள்' என்ற பெயரில் இதைக் கட்டுரையாக எழுதி அனுப்பினார். மொத்தம் வந்த 7,000 கட்டுரைகளில், முதல் பரிசாக இது தேர்வாகி, மலாயா பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
இதைப் பற்றி ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்பவர், "இந்தப்பரிசும், விமானத்தில் முதல் வெளிநாட்டுப் பயணமும் எனக்குள் தன்னம்பிக்கையை விதைத்தது. வகுப்பறையைத் தாண்டி, வெளியிலும் கற்கவும், கற்பிக்கவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது புரிய ஆரம்பித்தது.
2012-ல் விழுப்புரம் மாவட்டத்தில் சத்தியமங்கலம் என்னும் கிராமத்துக்கு மாறுதல் கிடைத்தது. அந்த வருடம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு எடுத்தேன். மூன்று பிரிவுகளிலும் இருந்த 180 மாணவர்களும் ஆங்கிலத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்".
செல்பேசியில் பாடம்
வகுப்பறைகளில் செல்பேசியைப் பயன்படுத்தலாமா கூடாதா என்ற விவாதம் நடந்த காலகட்டத்திலேயே, செல்பேசி மூலம் வீட்டுப்பாடம், வகுப்பு முதலியவற்றைப் பதிவு செய்து பயன்படுத்தினார். அரசு வலியுறுத்தாமலேயே, நல்வழியில், புதுமையான முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக தேசிய ஐ.சி.டி. நல்லாசிரியர் விருது கிடைத்தது. அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆசிரியர் திலீப்புக்கு விருதை வழங்கினார். மைக்ரோசாஃப்ட், தனது மென்பொருட்களை கல்வியில் சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக, 2015-ம் ஆண்டு மைக்ரோசாப்ட்டின் புதுமையான, தலைமைத்துவ கல்வியாளர் (MIELA)விருதை வழங்கியது. 840 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில், ஆசிரியர் திலீப் முதல் பரிசு பெற்று அமெரிக்கா சென்றார். 84 நாடுகளில் இருந்து வந்திருந்த 300 கல்வியாளர்களின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அடுத்து என்ன செய்தார் அவர்?
"கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று தோன்றியது. விழாவில் கலந்துகொண்ட அனைத்து கல்வியாளர்களையும் இணைத்து, ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை ஆரம்பித்தேன். அவரவர் கற்றலில் புதுமையாக என்ன செய்தாலும், அது உடனுக்குடன் புகைப்படமாகவே, காணொலியாகவோ பதிவேற்றப்படும்.
அதைத்தொடர்ந்து ஐசிடி தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு, எங்கள் பள்ளிக்கு, மாவட்டத்துக்கு என்று தனித்தனியாக குழுக்கள் தொடங்கப்பட்டன. ஆசிரியர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சியும் இதில் அளிக்கப்பட்டது. dhilipteacher என்ற வலைத்தளத்தில் நான் கற்றுக்கொண்ட, கண்டுபிடித்த தகவல்களைத் தொடர்ந்து பதிவேற்ற ஆரம்பித்தேன். அன்றாடப் பணிகளுக்கிடையில் இது சிரமமாக இருந்தாலும், 'மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க, ஆசிரியர்களும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்' என்ற எண்ணம் எனக்குள் உற்சாகத்தை விதைத்துக் கொண்டே இருக்கிறது".
நம் வட்டார வழக்கு சார்ந்த ஆங்கிலச் சொற்கள், அடிப்படை இலக்கணம், உச்சரிப்பு ஆகியவற்றைத் தொகுத்து 'அன்றாட ஆங்கிலம்' (Everyday English) என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார் ஆசிரியர் திலீப். இந்தப் புத்தகம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் விழுப்புரத்தில் உள்ள அனைத்துப் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது.
'இப்போது நாம் பயன்படுத்தும் அன்றாட வேலைகள் அனைத்தும் இணையமயமாக்கப் பட்டுவிட்டது. அதனால் வருங்காலத்தில், பாதுகாக்கப்பட்ட இணைய உலாவலைப் பள்ளியில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே தனது ஆசை!' என்று கூறுகிறார் தனது இரண்டு குழந்தைகளையும் அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படிக்க வைத்திருக்கும் ஆசிரியர் திலீப்.