மாணவியரிடம் தேச பக்தி உருவாக்க ஜன., 22ல் நிவேதிதை ரத யாத்திரை
பாரதியாரின் குருவான, சகோதரி நிவேதிதையின், 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில், இரண்டு லட்சம் மாணவியரிடையே, தேச பக்தியை ஊட்டும் விதமாக, ஜனவரி, 22ல், ரத யாத்திரை துவங்குகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த, மார்கரெட் எலிசபெத் நோபிள், 1895ல், சுவாமி விவேகானந்தரை சந்தித்ததும், அவரது சிஷ்யையாகி, சகோதரி நிவேதிதை என, பெயரை மாற்றினார். சுதந்திர போராளிகளுக்கு வழிகாட்டியதுடன், பெண் கல்வி, இந்திய கலை, கலாசார, பாரம்பரிய பாதுகாப்புக்கு போராடினார். இளைஞர்களிடம், தேசிய சிந்தனையை விதைத்தார்.
மகாகவி பாரதியார், நிவேதிதையை குருவாக ஏற்றார். அவரது, 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மாணவியரிடையே இந்திய கலாசாரம் மற்றும் தேச பக்தியை ஊட்டும் விதமாக, தமிழகத்தில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
இது குறித்து, யாத்திரை விழா அமைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக, பா.ஜ., பொதுச் செயலருமான, வானதி சீனிவாசன் கூறியதாவது: 'பெண்ணே நீ மகத்தானவள்' என்ற தலைப்பில், ராமகிருஷ்ண மடம் மற்றும் சாரதா மிஷன் அமைப்புகள் நடத்தும் இந்த யாத்திரை, ஜன., 22ல், கோவையில் துவங்கு கிறது; 27 மாவட்டங்களில் உள்ள பெண்கள் கல்லுாரிகள், பள்ளிகளுக்கு செல்கிறது. அங்கும், செல்லும் வழியில் உள்ள பொது இடங்களிலும், தேசபக்தி, பெண் கல்வி தொடர்பான பிரசாரம் நடைபெறும். அதில், சுகி சிவம், பாரதி பாஸ்கர் போன்றோர் பேசுகின்றனர்.
இதற்காக, ராமநாதபுரம், ராணி லட்சுமி சேதுபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு குழுவில், ரமேஷ் பிரபா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ரத யாத்திரை, 3,000 கி.மீ., பயணித்து, இரண்டு லட்சம் மாணவியரை சந்தித்த பின், பிப்., 22ல், சென்னையில், ரத யாத்திரை நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில், ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.