செயல்பாடற்ற நிலையில் செஞ்சிலுவை சங்கம் நிதி பற்றாக்குறையால் பணிகள் முடக்கம்
போதிய நிதி இல்லாமல், பெரும்பாலான கல்லுாரிகளில், செஞ்சிலுவை சங்கம் செயல்பாடுகள் இன்றி முடங்கி உள்ளதாக, திட்ட அலுவலர்கள் அதிருப்தி தெரிவித்து
உள்ளனர்.
மாணவர்கள் மத்தியில், மனிதநேயத்தை மேம்படுத்த, கல்லுாரிகளில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் செயல்படுகிறது. மாநிலத்தில், பாலிடெக்னிக், பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் உட்பட, 2,000க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், இச்சங்கம் செயல்படுகிறது. 12 லட்சம் மாணவர்கள், உறுப்பினர்களாக உள்ளனர்.கல்லுாரி மாணவர்களிடம் இருந்து, உறுப்பினராக, ஒருவருக்கு பதிவு கட்டணமாக, 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இதில், 12 ரூபாய் கல்லுாரி செயல்பாட்டு பணிகளுக்கும், எட்டு ரூபாய் மாநில அமைப்புக்கும் அனுப்பப்படும். ரத்த தான முகாம், முதலுதவி பயிற்சி, பேரிடர் மேலாண்மை ஆகிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.என்.சி.சி., --- என்.எஸ்.எஸ்., போல, செஞ்சிலுவை சங்க செயல்பாடுகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் தனியாக நிதி ஒதுக்குவதில்லை.
வெளி மாவட்டம், மாநிலங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, செலவினங்களை தானாகவே மேற்கொள்ளும் நிலை இருப்பதால், பெரும்பாலான கல்லுாரிகள், மாணவர்கள் ஆர்வம் காட்ட தயங்குகின்றனர்.செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அழகர்சாமி கூறியதாவது:மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறே, கல்லுாரி செயல்பாடுகளுக்கு நிதி சேர்கிறது. அதில், 40 சதவீதம் மாநில அமைப்புகளுக்கு அனுப்பப்படுகிறது. பேரிடர் மேலாண்மை, முதலுதவி நிகழ்ச்சிகளுக்கு, போதுமான நிதியில்லை என்பதே உண்மை.
கல்லுாரிகளில் திட்ட அலுவலர்களாக செயல்படுபவர்களுக்கு, மதிப்பீட்டு தொகை என்ற பெயரில், ஆண்டுக்கு, 1,200 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. பெரும்பாலான செயல்பாடுகளுக்கு, சொந்த பணத்தை செலவிட வேண்டிய கட்டாயம், திட்ட அலுவலர்களுக்கு உள்ளது. என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., போல, செஞ்சிலுவை அமைப்புக்கும் நிதியுதவி வழங்க, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.