நீட் தேர்வு மாணவர் சேர்க்கையில் வெளிமாநிலத்தவர்கள் 30 தாசில்தார்கள் ஐகோர்ட்டில் ஆஜர்: இரட்டை இருப்பிட சான்று விவகாரம்
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் வெளி மாநிலத்தவர்கள் இரட்டை இருப்பிட சான்று பெற்று சேர்க்கை பெற்ற விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு 30 தாசில்தாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜராகினர். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான தகுதிப் பட்டியல் கடந்த ஆகஸ்ட் 23ம் வெளியிடப்பட்டது. இதில் பிற மாநில மாணவர்களும், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம்பெற்றவர்களும் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்று இருப்பதால் தகுதி பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி விக்னயா உள்ளிட்ட சில மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், “வெளி மாநில மாணவர்கள் தமிழகத்தில் வசிப்பதாக தாசில்தார்களிடம் சான்றிதழ் பெற்றுள்ளனர். இதனால் அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை கிடைத்துள்ளது.
இந்த மாணவர்கள் இரட்டை இருப்பிட சான்று பெற்று விண்ணப்பித்துள்ளனர். எனவே, இந்த மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இருப்பிட சான்று வழங்கும் அதிகாரம் பெற்ற தாசில்தாரர்களை ஆஜராக உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30 தாசில்தாரர்கள் நேரில் ஆஜராகினர். அவர்கள் தரப்பு வக்கீல்கள் நீதிபதியிடம், முறையாக சரிபார்க்கப்பட்ட பிறகே இருப்பிட சான்று வழங்கப்பட்டது என்று தெரிவித்தனர். இதற்கு மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சான்றிதழ்களை சரிபார்த்து தெரிவிக்கும்படி மனுதாரர்களிடம் தெரிவித்த நீதிபதி விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.