ஆந்திரா நடைமுறையைப் பின்பற்ற முடிவு இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் விரைவில் மாற்றம்: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு
அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வுமுறையில் விரைவில் மாற்றம் கொண்டுவரவும், ஆந்திராவில் இருப்பதைப் போன்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தவும் பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு வருகிறது.
தற்போது அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் வெயிட் டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் ஆகியவற்றுக்கு 40 சதவீதமும் (இடைநிலை ஆசிரியர் எனில் பிளஸ் 2 மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி) வெயிட்டேஜ் அளிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக பிளஸ் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு இத்தேர்வுகளில் மதிப் பெண் குறைந்த அளவே வழங்கப்பட்டதால், வெயிட்டேஜ் முறையை மாற்ற வேண்டும் என்றும், தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு
தகுதித் தேர்வில் தங்களை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் அதிகமாக இருந்த காரணத்தினால் வேலையில் சேர்ந்துவிட்டதாகவும், தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பிளஸ் 2 மதிப்பெண் குறைவாக இருந்த காரணத்தினால் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
இந்த நிலையில், வெயிட்டேஜ் முறையில் உள்ள பாதிப்புகளை ஆராய்ந்து குறைகளைச் சரிசெய்ய பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழுவில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் வித்தியாசமாக இருக்கிறது.
அங்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன் னொரு போட்டித் தேர்வு நடத்து கிறார்கள். இறுதியாக, தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 20 சதவீதமும், போட்டித்தேர்வுக்கு 80 சதவீதமும் வெயிட் டேஜ் அளிக்கப்படுகிறது. முந் தைய தேர்வுகளான பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட், இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படுவதே இல்லை. அங்கு பின்பற்றப்படும் வெயிட் டேஜ் முறையால் எந்த தேர்வர் களுக்கும் பாதிப்பு இல்லை.
மற்றொரு போட்டித்தேர்வு
ஆந்திராவில் பின்பற்றப்படும் பணிநியமன நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்படுமா என்று தமிழக அரசு அமைத்துள்ள குழு உறுப்பினர்களிடம் கேட்டபோது, “தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னொரு போட்டித்தேர்வு நடத்தி அந்த வெயிட் டேஜ் அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்வுசெய்யும் ஆந்திர நடைமுறையைப் பின்பற்றுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.
இதனால், தற்போதை வெயிட் டேஜ் முறைக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வராது. தகுதித் தேர்வு மதிப்பெண், எழுத்துத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் அமைவதால், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வுகளில் மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்களும் கவலைப்படத் தேவையில்லை. எனவே, ஆந்திர தேர்வுமுறையை தமிழகத்தில் நடை முறைப்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தனர்