டப்...டப்...டப்... சத்தத்துடன் புல்லட் ஓட்டினால் ரூ.1500 டப்பு அழணும்! : ஒலி மாசு ஏற்படுத்துவதால் நடவடிக்கை
இன்று புல்லட் ஓட்டுவது 'பேஷனாகி' விட்டது. 1.50 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து 'புல்லட் வருகிறது' என சத்தத்தை கேட்டே ஒதுங்கும் வகையில், இனி 'டப்...டப்...டப்...' என 'பந்தாவாக' வந்தால் ஒலிமாசு ஏற்படுத்தியதாக போலீசாரிடம் 1500 ரூபாய் வரை அபராதம் அழ வேண்டும்.
கல்லுாரி மாணவர்கள், பைனான்ஸ் செய்பவர்கள் உள்ளிட்ட சிலர், புல்லட்டில் வலம் வருவதை
பெருமையாக கருதுகின்றனர்.
ஷோரூமில் அனைத்து வரிகளும் சேர்த்து 1.50 லட்சம் ரூபாய்க்கு புல்லட்டை வாங்கினால், 'அதிக மைலேஜ்வேண்டும் என்றால் 'ஏர் பில்ட்டருடன் சைலன்சரை' 30 ஆயிரம் ரூபாய்க்கு மாற்றினால் போதும்' எனஷோரூம்காரர்களே மூளைச்சலவை செய்கின்றனர்.
'1.50 லட்சத்திற்கு வாங்கிட்டோம். கூடுதலாக 30 ஆயிரம் ரூபாய்தானே' என புல்லட் வாங்கும் மோகத்தில் 'டப்...டப்...' என ஓசை வரும் 'சைலன்சரை' மாற்ற சம்மதித்து விடுகிறார்கள். இப்படி தமிழகம் முழுவதும் பலர் அதிக சத்தத்துடன் புல்லட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
சமீபகாலமாக உச்சநீதிமன்றம் உத்தரவுபடி, சிக்னல் விழுந்த பிறகும் ரோட்டை கடப்பது உள்ளிட்ட 6 போக்குவரத்து விதிகளை மீறினால், கட்டாயம் அபராதம் விதித்து, ஒரிஜினல் டிரைவிங் லைசென்சை பறிமுதல் செய்ய வேண்டும் என போக்குவரத்து போலீசாருக்கு அதிகாரிகள்
அறிவுறுத்தி உள்ளனர். இதன்படி, தமிழகம் முழுவதும் மாதந்தோறும் ஆயிரக்கணக்கானோரின் டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டு, ஆர்.டி.ஓ.,வுக்கு அனுப்பப்படுகின்றன.
அதேசமயம் இந்த 6 விதிமீறல்களுடன் ஒலிமாசு ஏற்படுத்தும் புல்லட் மற்றும் மோட்டார்
சைக்கிள் ஓட்டுனர்களிடம் அபராதம் வசூலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படுவதில்லை.
போலீசார் கூறியதாவது: ஒலிமாசு ஏற்படுத்தும் வகையில் ஷோரூமிலேயே 'சைலன்சரை' மாற்றுகின்றனர். பின்னர் புல்லட்டை ஆர்.டி.ஓ.,வுக்கு கொண்டு செல்லும்போது, அவர்களும் அதை ஆமோதித்து பதிவெண் வழங்குகின்றனர். நாங்கள் ஒலிமாசு ஏற்படுத்துவதாக அபராதம் வசூலிக்கும்போது,'ஆர்.டி.ஓ., அலுவலகத்திலேயே அதை ஏற்றுக்கொண்டு பதிவெண் வழங்கும்போது, அபராதம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்' என வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தற்போது இந்த ஒலிமாசுக்கு 1000 ரூபாயும், வாகன கட்டமைப்பை மாற்றியதற்காக 500 ரூபாயும் அபராதம் வசூலிக்கிறோம். சில சமயம் இரண்டும் சேர்த்தும் 1500 ரூபாய் அபராதம் விதிக்கிறோம். இப்பிரச்னை குறித்து ஆர்.டி.ஓ.,க்களுக்கு கடிதம் எழுத உள்ளோம், என்றனர்.