மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவழி மாணவி உதவிகரம்!
மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்கள் சுயதொழில் செய்ய, மிதியடி தயாரிக்கும் மிஷினை, தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த, 15 வயது பிரிட்டன் பள்ளி மாணவி வழங்கினார்.
பிரிட்டன் நாட்டின், லண்டன் நகரில் வசிக்கும், தமிழ் வம்சாவழி தம்பதி, யசோதன் - உமா
மகேஸ்வரி; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட இவர்களது மகள் சுருதி யசோதன், 15. இவர், லண்டன், கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள, 'தி பெர்ஸ்' பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் பிறந்தது ஜெர்மனியில் என்பதால், தாய்மொழியாக ஜெர்மன் மொழியை தவிர, ஆங்கிலம், தமிழ் மொழிகளிலும் பேச கூடியவர்.இருப்பினும், தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த பெண். தன் சிறுவயது முதல் சமூகத்தின் மீதுள்ள அக்கறையால், சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
தான் உருவாக்கும் செயற்கை நகைகளை, இங்கிலாந்து முழுவதும், விற்பனை செய்துள்ளார்.
அதில் கிடைத்த, மூன்று லட்சம் ரூபாயை சமூக பணிகளுக்கு வழங்கிஉள்ளார்.
இவர் சேவையை பாராட்டி பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நற்சான்றிதழ் வழங்கிஉள்ளன.
இவரது சேவைக்கு, ஊக்கம் தரும் விதமாக, பிரிட்டனில் இவர் பயிலும், 'தி பெர்ஸ்' பள்ளி, இந்திய ரூபாய் மதிப்பில், 30 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளது. அதை, கும்பகோணத்தில் உள்ள, ஈஸ்வர் மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள், சுயதொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையில்,
மிதியடி தயாரிக்கும் தையல் மிஷினாக, நேற்று பள்ளிக்கு வழங்கினார்.
இவ்விழாவில், கோவையைச் சேர்ந்த ஜெகதீஷ், பள்ளி தலைமை ஆசிரியை பாலாம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து மாணவி சுருதி கூறியதாவது: கடந்த ஆண்டு, கும்பகோணத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், மாணவர்கள் தங்கள் உடலை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். இந்தாண்டு மனவளர்ச்சி குன்றிய மாணவர், சுயதொழில் புரிவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மிதியடி தயார் செய்யும் மிஷின் ஒன்றை வழங்கியுள்ளேன்.
புற்று நோயால் பாதிக்கப் பட்டு, தலை முடியை இழந்தவர்களுக்கு, மீண்டும் செயற்கையாக முடி பொருத்த, என் தலைமுடியை இணையதளம் மூலம் ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைத்த, 30
ஆயிரம் ரூபாயையும், சமூக நல பணிக்காக செலவு செய்து உள்ளேன். மேலும், அடுத்த மாதமும், என் முடியை தானமாக வழங்க உள்ளேன். இவ்வாறு மாணவி சுருதி யசோதன் கூறினார்.
நன்றி தினமலர்