ரூ.2,000 நோட்டுகள் வெளியிடுவது நிறுத்தம்!
அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதால், 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதுடன், கையில் உள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதையும் ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்தாண்டு நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானது. அதன்படி புழக்கத்தில் இருந்த, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, புதிதாக, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, 200 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் விடப்பட்டது.
இந்நிலையில், நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் குறித்து, ரிசர்வ் வங்கி சமீபத்தில், தனது ஆண்டு அறிக்கையில் கூறியிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொருளாதார ஆலோசகர், சவுமியா காந்தி கோஷ் எழுதியுள்ள ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, இந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி, 3.50 லட்சம் கோடி ரூபாய்க்கு, குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும், 13.32 லட்சம் கோடி ரூபாய்க்கு, உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளன. லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையின்படி, ரிசர்வ் வங்கி, 15.78 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளையும் அச்சிட்டுள்ளது.
அச்சிடப்பட்ட நோட்டுகள் மற்றும் புழக்கத்தில் உள்ள நோட்டுகளுடன் ஒப்பிடுகையில், 2.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் மதிப்பு நோட்டுகள் புழக்கத்துக்கு வரவில்லை. ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியுள்ளது. மேலும், கையில் உள்ள அச்சிடப்பட்ட நோட்டுகளையும் புழக்கத்தில் விடவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.