பெற்றோருக்கு நன்றி செலுத்துங்க! : ராணுவ வீரர்களுக்கு அதிகாரி அறிவுரை
ராணுவ பயிற்சி முடித்த வீரர்கள், சத்தியப் பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி, குன்னுார், எம்.ஆர்.சி., மையத்தில், நேற்று கோலாகலமாக நடந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கு, 46 வார கால பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிக்கும் வீரர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ராணுவ பணிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
பயிற்சி முடித்த வீரர்கள், 330 பேர் சத்தியப் பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
இதில், வீரர்கள் உப்பு எடுத்து, உட்கொண்டதுடன், பகவத் கீதை, பைபிள், குரான் ஆகியவற்றின் மீது, தேசியக் கொடி போர்த்தி, நாடு காக்கும் பணிக்காக, சத்தியப் பிரமாணம்
எடுத்துக் கொண்டனர்.தொடர்ந்து நடந்த, கம்பீர அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட, தென்னிந்திய ராணுவ தலைமை அதிகாரி, லெப்.ஜெனரல் ஆனந்த், பயிற்சியில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு, பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.அவர் பேசுகையில், ''நாட்டிற்காக அர்ப்பணித்துள்ள உங்களது எதிர்காலம், சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.
''ராணுவத்தில் கடும் பயிற்சி பெற்று, நாட்டிற்காக அர்ப்பணித்த ராணுவ வீரர்கள், தங்களின் தாய், தந்தையருக்கு நன்றி செலுத்த வேண்டும். எல்லை பகுதிகளுக்கு செல்லும் வீரர்கள்,
நாட்டுப்பற்றுடனும், ஒழுக்கத்துடனும் பணியாற்ற வேண்டும்,'' என்றார்.