கிரீமிலேயர் நிலையை நிர்ணயிக்க உயர்நிலைக்குழு: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 27 சதவீதம் இடஒதுக்கீட்டின் பயனை அனுபவிப்பதற்கான கிரீமிலேயரை தீர்மானிப்பதற்காக மத்திய அரசு வகுத்துள்ள வரையரை பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு பெரும் துரோகமும், அநீதியும் இழைத்திருக்கிறது. சமூகநீதி வழங்குவதில் மத்திய அரசின் இருவகை பணியாளர்களுக்குவெவ்வேறு அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
கிரீமிலேயர் தொடர்பான மத்திய அமைச்சரவையின் முடிவு சமூகநீதிக்கு எதிரானது ஆகும். இதனால் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் வீட்டுக் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, மத்திய அமைச்சரவை அதன் முடிவை திரும்பப் பெறுவதுடன், 1993-ம் ஆண்டில் மத்திய அரசு பிறப்பித்த ஆணையின் அடிப்படையில், பொதுத்துறை நிறுவன அதிகாரிகளின் கிரீமிலேயர் நிலையை நிர்ணயிக்க உயர்நிலைக்குழு அமைக்கப்பட வேண்டும். மத்திய அமைச்சரவையின் முடிவால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அம்முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சமூக நீதியைக் காக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.