மருத்துவ சீட்களை முடக்கினால் ரூ.2 லட்சம் அபராதம்: மத்திய அரசு திட்டம்
மருத்துவ இடங்கள் ‘நீட்’ தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. இளங்கலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகியவற்றை பொறுத்தவரை, மாநில அரசு மருத்துவ கல்லூரி இடங்களுக்கும், தனியார் கல்லூரி இடங்களுக்கும் அந்தந்த மாநில அரசுகளே சேர்க்கையை நடத்துகின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிகர்நிலை கல்லூரி இடங்களுக்குமான சேர்க்கையை மத்திய அரசு நடத்துகிறது.
தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்களான எய்ம்ஸ், ஜிப்மர் ஆகியவை சொந்த கவுன்சிலிங் நடைமுறையை பின்பற்றுகின்றன. இப்படி தனித்தனியாக சேர்க்கை முறை பின்பற்றப்படுவதால், தரவரிசை பட்டியலில் முன்வரிசையில் இருக்கும் மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிகர்நிலை கல்லூரிகளில் மருத்துவ இடங்களை தேர்வு செய்து முடக்கி வைத்து விடுகிறார்கள்.
இதனால், அவர்களுக்கு பின்வரிசையில் உள்ள மாணவர்களுக்கு அந்த இடங்கள் கிடைக்காமல் போகின்றன. பின்னர், சிறந்த அரசு கல்லூரியில் கிடைத்த இடத்தை வைத்துக்கொண்டு, மற்ற நிகர்நிலை கல்லூரி இடங்களை விட்டு விடுகிறார்கள். இதனால், அந்த இடங்கள் காலியிடங்கள் ஆகி விடுகின்றன. பல சுற்றுகளுக்கு பிறகே அவை நிரப்பப்படுகின்றன.
உதாரணமாக, கடந்த ஆண்டு, மாநில அரசு இடங்களுக்கும், நிகர்நிலை கல்லூரி இடங்களுக்கும் ஒரே நேரத்தில் கவுன்சிலிங் நடந்தது. இதனால், 2 கல்லூரிகளிலும் இடத்தை முடக்கி வைத்த மாணவர்கள், பின்னர் அரசு கல்லூரி இடத்தை மட்டும் தேர்வு செய்தனர். இதனால், 2 சுற்று முடிந்த பிறகும், நிகர்நிலை கல்லூரிகளில் சுமார் 80 சதவீத இடங் கள் காலியாக இருந்தன.
இதற்கு முடிவு கட்டும் வகையில், மத்திய சுகாதார அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மத்திய அரசு சேர்க்கை நடத்தும் மருத்துவ, பல் மருத்துவ இடங்களுக்கு பதிவு கட்டணம் செலுத்தும் திட்டத்தை இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதலுடன் மத்திய சுகாதார அமைச்சகம் வகுத்துள்ளது. தனியார் மற்றும் நிகர்நிலை கல்லூரி இடங்களுக்கு இந்த பதிவு கட்டணம் ரூ.2 லட்சமாகவும், அரசு இடங்களுக்கு ரூ.25 ஆயிரமாகவும் இருக்கும்.
தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஏற்றுக்கொள்ளும் மாணவருக்கு கல்வி கட்டணத்தில் அந்த பதிவு கட்டணம் கழித்துக்கொள்ளப்படும். ஒருவேளை, அவர் வேறு கல்லூரிகளில் தேர்வு செய்த இடத்தை ஏற்றுக்கொண்டு, இந்த இடத்தை நிராகரித்து விட்டால், அவருக்கு அபராதமாக பதிவு கட்டணம் திருப்பித்தர மாட்டாது.அத்தகைய மாணவர்கள் ரூ.2 லட்சம் வரை இழக்க வேண்டி இருக்கும். மேலும், மேற்கொண்டு அவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்க தடை விதிக்கப்படும். இந்த திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டால், அடுத்த ஆண்டில் இருந்து இது அமல்படுத்தப்படும்.
எல்லா கல்லூரிகளுக்கும் ஒருங்கிணைந்த கவுன்சிலிங் நடத்தினால்தான், மருத்துவ இடங்களை முடக்கும் பிரச்சினையை தீர்க்க முடியும்.
மேலும், மத்திய, மாநில அரசு இடங்களை நிரப்பிய பிறகுதான், நிகர்நிலை கல்லூரி இடங்களுக்கு கவுன்சிலிங்கை தொடங்கும் யோசனையையும் முன்வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும், மாணவர் சேர்க்கையின் எந்த காலகட்டத்தில், இந்த அபராதத்தை விதிப்பது என்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் எந்த முடிவும் எடுக்கவில்லை. முதல் சுற்றில், எந்த அபராதமும் விதிக்கப்படாது என்று தெரிகிறது.
இந்த யோசனையை இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகளை கண்காணிக்கும் மேற்பார்வை குழு பரிசீலித்து வருகிறது. அக்குழு தெரிவிக்கும் மாற்றங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
அதே சமயத்தில், அபராதம் விதிக்கும் யோசனைக்கு மாணவர்களும், பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கருதப்படுகிறது.