கேரள பள்ளி மாணவர்களுக்கு மொபைல் ஆப் பயிற்சி
கேரளாவில், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் வகையில், 30 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு, 'மொபைல் ஆப்' உருவாக்கம் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் வகையில்,
ஒரு லட்சம் பேருக்கு, 'மொபைல் ஆப்' உருவாக்கம் குறித்த பயிற்சி அளிக்க, மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, 8 - 10ம் வகுப்புமாணவர்களில், ஐ.டி., நெட்வொர்க் உருவாக்கப்பட்டு, அதில், ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். கேரள கல்வி கட்டமைப்புக்கான தொழில்நுட்பம் என்ற பெயரில், மாநில அரசின் சார்பில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக, கிறிஸ்துமஸ்விடுமுறையில், 30 ஆயிரம் மாணவர்களுக்கு, 'மொபைல் ஆப்' உருவாக்கம் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, அவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் வகையில், 'ஹார்டுவேர், அனிமேஷன், சைபர் சேப்டி,
எலக்ட்ரானிக்ஸ்' மற்றும் மலையாளம் கம்ப்யூட்டிங் உள்ளிட்டவை குறித்து, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே, செப்டம்பரில் நடந்த பயிற்சி வகுப்பில், சில அடிப்படை விஷயங்கள் கற்றுத் தரப்பட்டன. தற்போது, அதன் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.