பொது அறிவுடன் நுண்ணறிவு வளர்த்தால் வேலை நிச்சயம் பொது அறிவுடன் நுண்ணறிவு வளர்த்தால் வேலை நிச்சயம்
பொது அறிவுடன் நுண்ணறிவையும் வளர்த்துக்கொண்டால் அரசு வேலை எளிதில் கிடைக்கும்', என மதுரையில் தினமலர் சார்பில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வு ஆலோசனை முகாமில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் குரூப் 4 பணிகளில் காலியாக உள்ள வி.ஏ.ஓ., உட்பட 9351 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு வரும் பிப்.,11ல் நடக்கிறது. இத்தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான ஆலோசனை முகாம் மதுரை மன்னர் திருமலை நாயக்கர்
கல்லூரியில் நடந்தது. இதில் பொது அறிவு, தமிழ் பகுதி குறித்து வல்லுனர்கள் பேசியதாவது:
பி.வெங்கடாசலம் (பொது அறிவு), நிர்வாக இயக்குனர், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங், மதுரை: டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளில் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வெற்றி
பெறுகின்றனர். இதற்கு உரிய நேரத்தில் தேர்வு எழுதவுள்ளவர்களுக்கு தினமலர் நடத்தும் ஆலோசனை முகாம் முக்கிய காரணம். பிப்.,11ல் நடக்கும் தேர்வுக்கு 18
லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தாலும் 80 ஆயிரம் பேர்களுக்கு இடையே தான் உண்மையான போட்டி இருக்கும்.
மொத்த வினாக்கள் 200ல் பொது அறிவு பகுதியில் 75 வினாக்களும், அறிவு கூர்மை வினாக்கள் 25 ம் கேட்கப்படும். 'நெகட்டிவ்' மதிப்பெண் இல்லாததால் அனைத்து வினாக்களுக்கும் விடை அளிப்பது முக்கியம். காலிப் பணியிடங்கள், வினாத்தாள் தன்மை அடிப்படையில் 'கட்ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்படும்.
பள்ளி பாடப் புத்தகங்கள் மற்றும் இதற்கு முன் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களை நன்கு படிக்கலாம். ஓராண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். தினமலர் உள்ளிட்ட பத்திரிகைகளை அவசியம் படிக்க வேண்டும். பொது அறிவுடன் நுண்ணறிவையும் வளர்த்துக்கொண்டால் போட்டி தேர்வு மூலம் எளிதில் அரசு வேலை பெற முடியும்.
தெத்தூர் சி.செந்தில்குமார் (தமிழ்), உதவி பேராசிரியர், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை: தமிழ் பகுதியில் 100 வினாக்கள் இடம் பெறும். இலக்கணத்தில் 40, இலக்கியத்தில் 38, தமிழ் அறிஞர், தமிழ் தொண்டு பகுதியில் 22 வினா என பிரித்து கேட்கப்படும். ஆறு முதல் பிளஸ் 2 வரை பாடப் புத்தகங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்.உதாரணமாக, 6ம் வகுப்பில் திருக்குறள் பகுதியை படித்த பின் 7,8,9ம் வகுப்புகளில் உள்ள திருக்குறள் பகுதி என முறைப்படுத்தி படிக்க வேண்டும். கட்ஆப் மதிப்பெண் அதிகம் கிடைக்க இப்பகுதியில் 100 வினாக்களுக்கும் சரியான விடையை எழுத பயிற்சி பெற வேண்டும். பொருத்தமான, பொருந்தாத, தேர்வு செய்க, நூல் ஆசிரியர்கள், அடைமொழி, பிரித்தெழுதுக, எதிர்ச்சொல் தருக, சந்திப்பிழை, இலக்கணக் குறிப்பு, வினைத் தொகை என அனைத்து பகுதிகளில் இருந்தும் வினாக்கள் இடம் பெறும். புரிந்து படிப்பது அவசியம்.பங்கேற்றவர்களுக்கு தினமலர் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் சார்பில் இலவச பொது அறிவு புத்தகம் வழங்கப்பட்டது.
சிறப்பு பஸ்கள் ஏற்பாடு
ஆலோசனை முகாமில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருமங்கலம் உட்பட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்த பின் அவர்கள் சிரமமின்றி ஊர்களுக்கு செல்ல வசதியாக கல்லூரி வளாகத்தில் இருந்தே சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்கியது.