திருவள்ளுவர் பல்கலையுடன் பெல் ஒப்பந்தம்
கல்விக்கும், தொழில் சார்ந்த உயர்வுக்கும் பயன் பெறும் வகையில், திருவள்ளுவர் பல்கலை, 'பெல்' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
வேலுார், சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனமும், நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இதில், திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் முருகன், ராணிப்பேட்டை பெல் நிறுவன நிர்வாக இயக்குனர் கலைச்செல்வன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதன்படி, திருவள்ளுவர் பல்கலை மாணவர்கள், பெல் நிறுவனத்தின் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவும், பெல் நிறுவன அதிகாரிகள், திருவள்ளுவர் பல்கலையில், டாக்டர் பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் முடியும். பல்கலை துணைவேந்தர் முருகன் கூறியதாவது: திருவள்ளுவர் பல்கலையில், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த, 128 அரசு, தனியார் கலைக் கல்லுாரிகள், ஆறு உறுப்பு கல்லுாரிகள் உள்ளன. ஏற்கனவே, சவுதி அரேபியா கிளவ்சாட், தைவான் நாட்டின் ஓசோன் பல்கலை, நாராயணி கல்வி அறக்கட்டளை, ஹாங்காங் பாப்பிஸ்ட் பல்கலை ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன, என்றார்.
பதிவாளர் பெருவழுதி உடனிருந்தார்.