நாம் உறங்கும் நேரத்தை விட நமது மூதாதையர்கள் குறைவான நேரம் தான் உறங்கியிருப்பார்கள் என்று ஆய்வொன்று கருதுகின்றது.
ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க பிராந்தியங்களில் வாழும் பழங்குடி சமூகங்களின் உறங்கும் வழக்கங்கள் பற்றி அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர்.
பண்டைக்காலத்து வேட்டைச் சமூகங்களின் வாழ்க்கை முறைகளையே இந்த பழங்குடி சமூகங்கள் பெரும்பாலும் பிரதிபலிக்கின்றன.
98 பேரை 1165 இரவுகள் ஆய்வாளர்கள் கண்காணித்துள்ளனர். அதில் அவர்கள் சராசரியாக ஆறரை மணிநேரம் தான் தூங்குவது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவல் வாழும் பெரும்பாலான மக்கள் 7 மணிநேரம் வரை தூங்குவதாக கூறுகின்ற இன்னொரு கணிப்புடன் இந்த ஆய்வுமுடிவை ஆய்வாளர்கள் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளனர்.
வெப்பநிலை முக்கிய காரணி
பண்டைய காலத்தில் வெளிச்சத்தை பார்க்கிலும் சூழலின் வெப்பநிலையே உறங்கும் வழக்கங்களை தீ்ர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக கரண்ட் பயாலஜி என்கிற சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த புதிய ஆய்வு கூறுகின்றது.
இப்போது, செயற்கையான வெளிச்சங்கள், இரவில் நேரங்கடந்து பார்க்கும் தொலைக்காட்சி, இப்போது ஸ்மார்ட் போன் தொலைபேசிகள் இப்படி எல்லாம் சேர்ந்த நமது நவீன வாழ்க்கைமுறை நமது தூக்கத்தை தீர்மானிப்பதாக கூறப்படுகின்றது.
இதனை பரீட்சிப்பதற்காக தான்சானியாவின்- ஹட்சா சமூகத்தினர் நமீபியாவின் சான் சமூகத்தினர் மற்றும் பொலிவியாவின் சிமானே ஆகிய மூன்று வெவ்வேறு சமுகத்தினர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். இந்த சமூகங்களிடமிருந்து இந்த ஆய்வுக்காக முன்வந்தவர்களில் தூக்கத்தை கண்காணிக்கின்ற கருவிகள் பொருத்தப்பட்டன.
இந்த மூன்று குழுவினரும் பெரும்பாலும் ஒரே அளவான நேரமே தூங்குகிறார்கள் என்பது தெரியவந்ததாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெரோம் சேகெல் கூறினார்.
வித்தியாசமான சூழல்களில் வாழ்ந்தாலும் அவர்களிடம் பொதுவான மனித உடல் ரீதியான பிரதிபலிப்புகளையே காணமுடிவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் சராரியாக ஆறுமணித்தியாலங்களும் 25 நிமிடங்களும் உறங்குவதாகம் வேறுநேரங்களில் குட்டித் தூக்கம் போடும் வழக்கம் பெரும்பாலும் இருக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இரவில் தூங்கும்போது இடைநடுவில் விழித்து- மீண்டும் தூங்கும்- இரண்டு கட்டங்களாக உறங்கும் வழமை பொதுவாக இப்போதைய மனிதர்களிடத்தில் இருப்பதாக தூக்கம் பற்றிய ஐரோப்பிய ஆவணங்கள் கூறுகின்றன.
இயற்கை வெளிச்சம் தூக்கத்தை தீர்மானிக்கவில்லை
ஆனாலும் இந்த வழக்கம் பண்டைய வேட்டைச் சமூகத்திடம் இருக்கவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஆச்சரியப்படும் விதமாக, இயற்கை வெளிச்சம் அவர்களின் தூக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சூரியன் மறைந்து சராசரியாக 3.3 மணிநேரத்துக்குப் பின்னரே அவர்கள் உறங்கியுள்ளனர்.
எவ்வாறாயினும் சூழல் வெப்பம் அவர்களின் துக்கத்தில் முக்கிய தாக்கம் செலுத்தியுள்ளது.
அதாவது, வெப்பநிலை குறையும் நேரங்களில் தூங்கச் சென்று, வெப்பநிலை ஆகக்குறைந்தளவை தொட்ட பின்னர் விழித்துக் கொள்வது தான் அவர்களின் வழக்கம் என்கிறார் பேராசிரியர் சேகல்.
நாம் தினமும் உறங்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ள 7 முதல் 9 மணிநேர இரவு உறக்கத்தைவிட பழங்குடி சமூகங்கள் குறைவான நேரமே உறங்குகின்றார்கள் என்பது தான் ஆய்வாளர்களின் நம்பிக்கை.
இருந்தாலும், இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த சரே பல்கலைகழகத்தின் தூக்கம் தொடர்பான ஆய்வு மையத்தின் ஆய்வாளர் பேராசிரியர் டேர்க் ஜான் டிஜ்க், இது ஒரு முக்கியமான ஆராய்ச்சியே ஆனாலும் தமது மூதாதையர் நம்மைவிட குறைவாகன நேரமே தூங்கினார்கள் என்பதை திடமாக உறுதிப்படுத்துவதற்கு இந்த ஆய்வுமுடிவுகள் போதாது என்று கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.