2018-19ம் நிதியாண்டு மத்திய பட்ஜெட்டில் தேசிய வேலைவாய்ப்பு கொள்கை முதன்முறையாக..அறிமுகம்?
மத்திய அரசு, 2018-19ம் நிதியாண்டு பட்ஜெட்டில், முதன்முறையாக, தேசிய வேலைவாய்ப்பு கொள்கையை அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு துறைகளில், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், மக்களின் வருவாயை பெருக்கி, லட்சக்கணக்கானோரை வறுமை கோட்டிற்கு மேலே கொண்டு வரும் நோக்கில், இக்கொள்கை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், சமீபகாலமாக, புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது குறைந்துள்ளது. 2013ல், 4.19 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின. இது, 2014ல், 4.21 லட்சமாக அதிகரித்தது. ஆனால், 2015ல், ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில், 1.35 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகி உள்ளதாக, மத்திய தொழிலாளர் துறையின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
இதற்கிடையே, 2012-13ம் நிதியாண்டில், 4.7 சதவீதமாக இருந்த வேலையில்லா திண்டாட்டம், 2014ல், 4.9 சதவீதமாகவும், 2016ல், 5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இது போன்ற காரணங்களால், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கொள்கையை தயாரிக்கும் பணியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு, தொழிலாளர்களை அதிகம் சார்ந்துள்ள துறைகளில், புதிய வேலைவாய்ப்புகளை பெருமளவு உருவாக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கு, குறிப்பாக, அமைப்பு சார்ந்த நிறுவனங்களுக்கு ஊக்கச்சலுகைகள் வழங்கப்படும். இதன் மூலம் பெருகும் வேலைவாய்ப்புகளால், ஏராளமான தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமும், சமூக பாதுகாப்பும் கிடைக்கும்.
இத்துடன் உற்பத்தி பெருகி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும். இதற்காக, நாடு தழுவிய அளவில், தற்போதைய வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து, மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பிராந்திய அளவில், துறை வாரியான தொழில் வாய்ப்புகள்; புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட, பல அம்சங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
இந்த புள்ளி விபரங்களின்படி, தேசிய வேலைவாய்ப்பு கொள்கை உருவாக்கப்படும். இக்கொள்கை குறித்த அறிவிப்பு, 2018 பிப்., 1ல், மத்திய பட்ஜெட் தாக்கலின் போது வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பரஸ்பர நலன் :
‛‛உட்கட்டமைப்பு, விளை பொருட்கள், தயாரிப்பு, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட, அனைத்து துறைகளிலும் உற்பத்தித் திறனை உயர்த்தும்பட்சத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். அத்துடன், இத்துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் பரஸ்பர நலன் சார்ந்ததாக, தேசிய வேலைவாய்ப்பு கொள்கை உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம், பல்வேறு துறைகளில் அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க முடியும்'' - எம்.எஸ்.உன்னிகிருஷ்ணன், தலைவர், தொழில் உறவு தேசிய குழு, சி.ஐ.ஐ.,