வங்கி கணக்குடன் ஆதார் அவகாசம் நீட்டிப்பு
வங்கி கணக்குடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அவகாசம், அடுத்தாண்டு மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும், சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற, ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.'வங்கி கணக்கு, மொபைல் போன் சேவைகளைப் பெற, ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்' என, கெடு விதிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, டிச., 31வரை அவகாசம் வழங்கப்பட்டது; பின், இந்த அவகாசத்தை, அடுத்த ஆண்டு மார்ச், 31 வரை நீட்டிக்க உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வங்கி கணக்குடன், ஆதார் எண்ணைஇணைப்பதற்கான அவகாசம், அடுத்த ஆண்டு மார்ச், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, ஜூன், 1ம் தேதிக்கு பின், வங்கியில் கணக்கு துவக்கியவர்கள், ஆதார் எண், பான் எண் அல்லது விண்ணப்ப படிவம், 90 ஆகியவற்றை, மார்ச், 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும், 'பான்' எண்ணுடன், ஆதாரை இணைப்பதற்கான அவகாசம், மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
'தனிநபர் சுதந்திரம், அடிப்படை உரிமை தான் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும்' என, மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.''இந்த வழக்கை, அரசியல் சாசன அமர்வு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்,'' என, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா அறிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள், ஏ.கே சிக்ரி, ஏ.எம். கன்வில்கர், டி.ஓய். சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் இடம்பெறுவர் என, தெரிகிறது.