வரலாற்று மாணவியருக்கு கல்வெட்டு பயிற்சி!
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், தர்மபுரி விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவியருக்கு, இரண்டு நாள் கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், ஒரு பகுதியின் வரலாற்றை எழுத, ஆதாரங்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், அந்த ஆதாரங்களில், மிகவும் முக்கியமானதாக கருதப்படும் கல்வெட்டுகளை கொண்டு வரலாறு எவ்வாறு எழுதப்படுகிறது, புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம், அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார்.
மேலும் மாணவியருக்கு, தமிழி என்று அழைக்கப்படும் தொல் தமிழ் வரிவடிவ எழுத்துக்களை எழுத, படிக்க, பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், எவ்வாறு எழுத்துக்கள் மாற்றமடைந்து, தற்போது தமிழ் எழுத்துக்கள் உள்ளன என்பதை உரிய உதாரணங்களுடன் விளக்கினார்.
இறுதியில், கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள கி.பி., 11ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால சோழர் கால கல்வெட்டை, படி எடுத்து, எழுத்துக்களை படித்து அவற்றின் பொருளை அறிந்துக் கொள்வது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. பங்கேற்ற, 55 மாணவியருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.