அப்துல் கலாம் பிறந்த நாள்: இளம் அறிவியலாளர்களுக்கு பாராட்டு விழா; அக்.14-க்குள் விண்ணப்பிக்கலாம்
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் அக்.15-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவில் இளம் அறிவியலாளர்கள் 100 பேர் பாராட்டப்படவுள்ளனர்.
இதுகுறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் பிறந்தநாள் விழா ஈரோடு சம்பத் நகர் கொங்கு கலையரங்கில் அக். 15-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள 100 இளம் அறிவியலாளர்களுக்கு பாராட்டு மடல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு அதற்கான தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அல்லது 25 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் இந்த பாராட்டு மடல் பெற விண்ணப்பிக்கலாம். தீவிரமான அறிவியல் ஆய்வு, அறிவியல் சிந்தனை, அறிவியல் கண்ணோட்டம், புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சி ஆகியவையே அடிப்படைத் தகுதிகளாகும்.
தமிழகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் தங்களது முழு விவரங்கள் மற்றும் தகவல்களுடன் மக்கள் சிந்தனைப் பேரவை அலுவலகத்தை அக்.14-ஆம் தேதிக்குள் தொடர்புகொள்ளலாம்.
இளம் அறிவியலாளர் எனத் தேர்வு செய்யப்படுவோருக்கு விழா மேடையில் பாராட்டு மடல் வழங்கப்படும். எதிர்காலத்தில் அவர்களை ஒன்று திரட்டி அறிவியல் மேதைகளுடன் சந்திப்பு, பயிற்சிப் பட்டறை போன்ற தொடர் முயற்சிகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை மக்கள் சிந்தனைப் பேரவை, ஏ-38, சம்பத் நகர், ஈரோடு-638011 என்ற முகவரிக்கு அக்.14-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, stalinguna@yahoo.com என்ற மின்னஞ்சலிலோ, 0424-2269186 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.