மீண்டும் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் முதல் துவங்கும்
இரண்டு வார இடைவெளிக்கு பின், தமிழக கடலோர பகுதிகளில், நாளை மறுநாள் முதல், வடகிழக்கு பருவமழை மிதமாக பெய்யலாம் என, வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, அக்., 27ல் துவங்கியது; அக்., 29 முதல், தீவிர மழையாக பெய்தது. நவ.,1 மற்றும், 2ல், சென்னை மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில், தீவிரமாக பெய்த தொடர் மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, மிதமாக பெய்த மழை, நவ., 29 மற்றும், 30ல், 'ஒக்கி' புயலாக மாறி, கன்னியாகுமரி கடலோர பகுதிகளை சூறையாடியது. இதில், நுாற்றுக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கி, கடலுக்குள் மாயமாகி விட்டனர். அவர்களின் கதி என்னவென்றே தெரியாத நிலை உள்ளது. தொடர்ந்து, குஜராத் வரை, ஒக்கி புயல் சுழன்று, சூரத்தில் கரை கடந்தது. பின், இரண்டு வாரங்களாக, தமிழகத்தில் குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை. தென் மாவட்டங்களில், சில இடங்களில் மட்டும், 10 செ.மீ., வரை மழை பெய்தது. இந்நிலையில், மீண்டும், நாளை மறுநாள் முதல், தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில், மிதமான மழை பெய்யலாம் என, வானிலை மையம் கணித்துள்ளது. கன்னியாகுமரிக்கு தென் கிழக்கில், மேல் அடுக்கு சுழற்சி உள்ளதால், தென் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யலாம் என, கணிக்கப்பட்டுள்ளது.