சந்திரனில் ஆய்வு மையம் அமைக்க முயற்சி: விஞ்ஞானி சிவதாணு பிள்ளை
சந்திரனில் ஆய்வு மையம் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றார் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானி சிவதாணு பிள்ளை.
விண்வெளித் துறை தொடர்பான படிப்புகளை முடித்து, அந்தத் துறையில் பணியாற்ற இளைஞர்கள் தயாராக வேண்டும். பிரான்ஸ் நாட்டில் அமைக்கப்பட்டு வரும் மாதிரி பரிசோதனைக் கூடத்தில், இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. உலகில் முதன்முதலில் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்பு சுல்தான். இந்தியாதான் ஏவுகணை தயாரிப்பின் முன்னோடி.
ஒலியைவிட 25 மடங்கு அதிக வேகம் கொண்ட ஹைப்பர் சோனிக் தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணையைத் தயாரிக்க இந்தியா முயற்சி செய்து வருகிறது. இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகளுக்குள் இந்த முயற்சி வெற்றியடைய வாய்ப்பு உள்ளது. தோரியம் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அணுசக்தி போன்று ஹீலியம்-3 என்ற எரிபொருள் சந்திரனில் அதிகளவில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 2020ஆம் ஆண்டில் சந்திரனில் ஆராய்ச்சி நிலையம் அமைத்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்கா முயன்று வருகிறது.
அதேபோல, இந்தியா சார்பிலும் சந்திரனில் ஆய்வு நிலையம் அமைத்து ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த 20 ஆண்டுகளில் இது சாத்தியமாக வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.