தொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி
தொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைப்பதற்காக தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளிகளில் தாய் மொழியாம் தமிழில் எளிதில் மாணவர்கள் பேசுகிறார்கள். அதேநேரம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்-மாணவிகள் குறைந்த எண்ணிக்கையில்தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.
எல்லா மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேச அனைவருக்கும் கல்வி திட்டம் முன்வந்து தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது, அதன்படி முதல் கட்டமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைக்க முடிவு எடுக்கப்பட்டது.
முதலில் 1-ம் வகுப்பு முதல் 5-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் ‘லிப்ட் யுவர் ஹேண்ட்ஸ்’ என்று ஆங்கிலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கூறினால் உடனே மாணவர்கள் தங்களின் கைகளை உயர்த்தவேண்டும். இதுபோல் சிறு சிறு வார்த்தைகளை மாணவர்களுக்கு கற்பிப்பார்கள். மேலும் பாட்டு மூலமும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஆங்கிலத்தை கற்பிப்பார்கள்.
இவ்வாறு தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி ஒரு நாள் நடத்தப்பட்டது. பயிற்சி முடிந்ததும் தலைமை ஆசிரியர்கள் அவர்கள் பெற்ற பயிற்சியை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிப்பார்கள். அந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதில் ஆங்கிலத்தில் பேச வைப்பார்கள்.
ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது குறித்து 90 வகையான புத்தகங்கள், 4 சி.டி.க்கள் ஆகியவை அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை புதிய பாடத்திட்டவரைவிலும் ஆங்கிலத்தில் மாணவர்களை எளிதில் பேச வைப்பது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது.
மேற்கண்ட தகவலை கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.