போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க கல்லூரிகளுக்கு உத்தரவு
போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க, இன்ஜி., மருத்துவக் கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும், கல்லுாரிகளில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து உள்ளதால், அதை கட்டுப்படுத்த, உயர் கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, அனைத்து, இன்ஜி., மருத்துவக் கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள், கலை, அறிவியல் கல்லுாரிகளின் முதல்வர்களுக்கு, உயர் கல்வி செயலர், சுனில் பாலிவால் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
விபரம்: அனைத்து கல்லுாரிகளிலும், போதை பொருள் பயன்பாடு இல்லாமல், முதல்வர்கள் விதிகள் வகுக்க வேண்டும். தங்கள் நிறுவனத்தில் இருந்து, 100 மீ., சுற்றளவில், புகையில்லா பகுதி என, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். புகையில்லா பகுதியை உறுதி செய்து கையெழுத்திட்டு, மேல் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்ப வேண்டும்.
புகையிலை பொருளால் ஏற்படும் தீமை குறித்து, மாணவர்கள் வழியே, விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம் நடத்த வேண்டும். எந்த கல்லுாரியிலும், மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகாமல், நிர்வாகத்தினர் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.