பிளஸ் 2 நேரடி தேர்வுக்கு டிச.,11ல் பதிவு துவக்கம் :தட்கல் வாய்ப்பு கிடையாது
'பிளஸ் 2 பொது தேர்வை நேரடியாக எழுதும் தனித்தேர்வர்கள், வரும், 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 பொது தேர்வில், மார்ச், 2018ல், பள்ளிகள் வழியே இல்லாமல், நேரடியாக எழுதும் தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.
இதற்கான அறிவிப்பை, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.
நேரடி தனித்தேர்வர்கள், அபராதம் இன்றி கட்டணம் செலுத்த, வரும், 11 முதல், 16ம் தேதி வரையிலும், பின், அபராத கட்டணத்துடன் வரும், 18 முதல், 20ம் தேதிவரையிலும், விண்ணப்பிக்கலாம். மீண்டும் விண்ணப்பிக்க, தத்கல் வாய்ப்பு வழங்கப்படாது. ஆண், பெண் தேர்வர்கள், தேர்வுத்துறையால் அமைக்கப்பட்ட சேவை மையங்களுக்கு சென்று, விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நேரடி பிளஸ் 2 இதுவே கடைசி : இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2 பொது தேர்வை, தனித்தேர்வர்கள் நேரடியாக எழுத முடியாது. பிளஸ் 1 முடித்த பிறகே, பிளஸ் 2 தேர்வு எழுத முடியும்.
இந்த ஆண்டு, பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான விண்ணப்ப அறிவிப்பு, நேற்று வெளியானது.
அதில், '2016 ஜூலை தேர்வுக்கு முன், 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டுகள் கடந்தவர்கள், பிளஸ் 2 தேர்வை நேரடியாக எழுத, வரும் மார்ச் தேர்வு தான் கடைசி வாய்ப்பு' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.