மின் இழப்பை தடுக்கும் மைக்ரோ கிரிட் சோலார் : மதுரை பேராசிரியர் கண்டுபிடிப்பு
மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்த்தால் கூட மனசுக்குள் சட்டென 'ஷாக்' அடிக்கும். மின்சாரம் இருக்கும் போது வீணாக்குவதும், இல்லாத போது தேடி அலைவதும் நமக்கு பழக்கம் தான். இருந்தாலும், மின்சாரத்தை சேமிக்கும் கடமை நுகர்வோர் என்ற முறையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது.
மின்சாரத்தை அணுமின், காற்றாலை, கடல் நீரில் இருந்து உற்பத்தி செய்யலாம். ஆனால், இயற்கையே இறங்கி வந்து இலவசமாக கொடுக்கும் சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய நாம், பெரிய அளவில் அக்கறை காட்டுவது இல்லை.
இந்த சூரிய ஒளி மின்சாரத்தை சேமித்து, பயன்படுத்தும் முறைகள் குறித்து பல ஆராய்ச்சிகளை செய்து சில ஆண்டுக்கு முன் 'மைக்ரோ கிரிட்' என்ற கருவியை கண்டுபிடித்தார் மதுரை
தியாகராஜர் பொறியியல் கல்லுாரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் கண்ணன்.
அவர் கூறியதாவது:
ஆரம்பத்தில் மின் சாதனங்கள் எல்லாம் ஏ.சி.,யில் (ஆல்ட்ரனேட்டிவ் கரன்ட்) இயங்கும் வகையில் இருந்தன. மின் சாதனத்திற்கு நேரடியாக வரும் ஏ.சி., கரன்ட், டிரான்ஸ் பார்மர் மூலம் டி.சி.,யாக (டைரக்ட் கரன்ட்) மாறி சாதனத்தை இயங்க வைக்கும்.
தொழில்நுட்பம் வளர்ந்த பின் 'டிரான்ஸ்பார்மர்'களுக்கு பதில் எஸ்.எம்.பி.எஸ் (சுவிட்சுடு மோட் பவர் சப்ளை) என்ற சர்க்யூட் பொருத்தி ஏ.சி.,யை, டி.சி.,யாக மாற்றினர். இந்த சர்க்யூட்டில் டி.சி., கரன்ட்டை கொடுத்தாலும், மீண்டும் டி.சி., கரன்ட்டை தான் வெளியிடும் என்பதை கண்டறிந்தேன். அப்படி என்றால், மின் சாதனங்கள் டி.சி.,யில் இயங்கும் என்பது எனக்கு புரிந்தது.
அதாவது ஏ.சி., கரன்ட்டை டி.சி.,யாக மாற்றும் போது மின் இழப்பு ஏற்படும், அதோடு மின் சாதனங்களில் வெப்பமும் அதிகரிக்கும். இதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், சூரிய ஒளி மின்சாரத்தை 'இன்வெர்டர்' இல்லாமல் 'பேட்டரி'யில் சேமித்து பயன்படுத்தும் 'மைக்ரோ கிரிட்' முறையை கண்டறிந்தேன்.
சூரிய ஒளி மின்சாரம் என்பது நமக்கு இயற்கை வழங்கும் ஒரு டி.சி., கரன்ட். இதை நேரடியாக பேட்டரியில் சேமிக்கும் போது மின் இழப்பு ஏற்படாது, மின்சாரமும் மிச்சமாகும், மின் கட்டணமும் குறையும். சூரிய ஒளி மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப்படுவதால், இரவில் கூட டிவி, லைட், பேன் உள்ளிட்ட சாதனங்களை இயக்க முடியும்.
இந்த கண்டுபிடிப்பு குறித்து என் உதவியாளர் கருணாநிதி மூலம், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினேன். அந்த கடிதத்தில், 'மின் சாதனங்களுக்கு பின்னால் ஏ.சி., கரன்ட்டில் இயங்கும் என்று, குறிப்பிட்டுள்ள தயாரிப்பாளர்கள், டி.சி., கரன்ட்டிலும் இயங்கும் என்பதை குறிப்பிட வேண்டும். அப்படி குறிப்பிட்டால் நுகர்வோர், சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த முன்வருவார்கள், சுற்றுச்சூழல் வெப்பமயமாவதை தடுக்க முடியும்,' என்று சுட்டிக்காட்டி இருந்தேன்.
பிரதமர், இந்த கடிதத்தை மத்திய மின்சார அமைச்சகத்திற்கு அனுப்பினார். அந்த கடிதம் பி.ஐ.எஸ்., (பிரோ ஆப் இந்தியன் ஸ்டேன்ட்டர்ஸ்)க்கு சென்று பரிசீலிக்கப்பட்டது. தற்போது மின் சாதனங்களில் 'ஹை ஒல்டேஜ்' டி.சி., (180-300 வோல்ட்) என்று, குறிப்பிடுவதற்கான பணிகள் நடைமுறையில் உள்ளது என எனக்கு இமெயில் வந்துள்ளது. எனவே, இந்த தொழில்நுட்பம் குறித்து பொறியியல் மாணவர்கள் விழிப்புணர்வு பெற்று, வீணாகும் சூரிய ஒளி மின்சாரத்தை சேமித்து பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை, பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், என்றார்.
இன்னும் அறிய
98946 45308