கட்டடம் கட்ட நிதி இருக்கு... நிலம் இல்லை... - பள்ளிக்கு இடம் தேர்வு செய்வதில் அதிகாரிகள் மெத்தனம்
மதுரை பரவை சத்தியமூர்த்தி நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டடத்திற்கு நிதி ஒதுக்கியும் இடம் தேர்வு செய்வதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் மாணவர்கள் திறந்தவெளியில் படித்து வருகின்றனர்.இந்நகரில் காட்டுநாயக்கர் சமூக மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களது குழந்தைகளின் உயர் கல்வியை கருத்தில் கொண்டு இங்குள்ள அரசு பள்ளி, 2007ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 263 பேர் படிக்கின்றனர். மூன்று வகுப்பறை கட்டடங்கள் மட்டும் உள்ளதால் சமையலறையில் இரண்டு வகுப்புகளும், மற்ற வகுப்புகள் ரயில் தண்டவாளம் அருகே திறந்தவெளியிலும் வகுப்புகள் நடக்கின்றன. பாதுகாப்பற்ற சூழலில் மாணவர்கள் அமர்ந்து படித்து வருகின்றனர்.சமூக ஆர்வலர் சவுந்திரபாண்டியன்: மழைகாலங்களில் வகுப்பறைகள் இருள் சூழ்ந்தும், வெளியே தண்ணீர் தேங்கியும் நிற்கிறது. வெயில், மழைக்கு பள்ளி வராண்டாவில் ஒதுங்கி நிற்கும் நிலை தொடர்கிறது. மாணவர்கள் தரையில் அமருவதால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க ஆசிரியர்கள் 'பாய்' வாங்கி தந்துள்ளனர்.ஆசிரியர்களுக்கு என தனி அறை இல்லை. சத்துணவு பணியாளர் இல்லை. அருகே உள்ள அரசு துவக்கப்பள்ளியில் மதிய உணவை சமைத்து தள்ளுவண்டியில் மாணவர்கள் உதவியுடன் கொண்டு வருகின்றனர்.பள்ளி வளாகத்தில் இடவசதி இல்லாததால், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், புதிய கட்டடத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டும் பயனில்லை. கடந்த 5 ஆண்டுகளாக பள்ளிக்கு இடத்தை தேர்வு செய்வதில் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இப்பள்ளி மதுரை மேற்கு தொகுதியில் உள்ளது. தொகுதி எம்.எல்.ஏ.,வான அமைச்சர் செல்லுார் ராஜு மற்றும் கலெக்டர் வீரராகவராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.