அஞ்சலக சேமிப்பு கணக்குடன் ஆதார் இணைக்க வேண்டுமா?
அஞ்சலக சேமிப்பு கணக்குடன், ஆதார் மற்றும் மொபைல் எண் இணைக்க, அது தொடர்பான விபரங்களை பேப்பரில் எழுதி, வரும், 31ம் தேதிக்குள் தபால் பெட்டி யில் போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'எல்லா வகையான அஞ்சலக கணக்குகளுடன், வாடிக்கையாளரின் ஆதார் மற்றும் மொபைல் எண்களை இணைக்க வேண்டும்' என்று, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தற்போது அதற்கான பணிகள், நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. ஆதார், மொபைல் எண்களை பெற்ற பிறகே, தற்போது அஞ்சலகங்களில் புதிய கணக்கு துவங்கப்படுகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்களுடைய அஞ்சல் கணக்குடன் ஆதார், மொபைல் எண்களை, வரும், 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.
இது குறித்து, அஞ்சல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முழுவதும் அஞ்சல கங்களில் கணக்கு வைத்திருப்பவர்களில், பெரும்பாலானவர்கள் தங்களது ஆதார், மொபைல் எண்களை இணைக்கவில்லை. எனவே, அவர்களுக்காக ஆதார், மொபைல் எண்களை இணைக்க, எளிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வெள்ளை பேப்பரில் சேமிப்பு கணக்கு எண், அஞ்சலகம் மற்றும் வாடிக்கையாளர் பெயர், ஆதார் மற்றும் மொபைல் எண்களை எழுதி, அருகிலுள்ள தபால் பெட்டிகளில் போடலாம். இதன் மூலம், சேமிப்பு கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படும். இதுதவிர, தலைமை தபால் நிலையம் மற்றும் கிளை தபால் நிலையங்களில், 'டிராப் பாக்ஸ்' வைக்கப்பட்டுள்ளது. அதிலும், அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் எண்களை பேப்பரில் எழுதி போடலாம்.
அஞ்சலக சேமிப்பு உள்ளிட்ட அனைத்து கணக்குகளுடன், ஆதார் மற்றும் மொபைல் எண்களை இணைப்பதற்கு, டிச., 31ம் தேதி கடைசி நாள் என்பதால், இந்த எளிய வழிமுறையை தபால் துறை அறிமுகப்படுத்திஇருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.