புயல் ஆபத்தில் தப்பியது சென்னை 9 துறைமுகங்களுக்கு எச்சரிக்கை
'வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தமிழகத்திற்கு புயல் ஆபத்து இல்லை' என, வானிலை மையம் கூறிஉள்ளது. ஆனால், ஒன்பது துறைமுகங்களில், புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இது நாளை, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என, கணிக்கப்பட்டுள்ளது.இது, நேற்று மாலை நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கே, 800 கி.மீ., துாரத்திலும், ஆந்திராவின்மசூலிப்பட்டினத்துக்கு தென் கிழக்கில், 1,000 கி.மீ., துாரத்திலும் மையம் கொண்டிருந்தது. இந்த மண்டலம், இன்று முதல், ஆந்திரா மற்றும் ஒடிசாவுக்கு இடையே, கடற்கரையை நோக்கிநகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் கூறியதாவது:காற்றழுத்த தாழ்வு மண்டலம், வட மேற்கு திசையில், ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும். கரையை நெருங்கும்போது, வலுவிழக்கும். அதனால், தமிழகத்திற்கு புயல் ஆபத்து எதுவும் இல்லை. சென்னையில், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, சென்னை, கடலுார், நாகை, காட்டுப்பள்ளி, பாம்பன், எண்ணுார், துாத்துக்குடி, காரைக்கால், புதுச்சேரி ஆகிய ஒன்பது துறைமுகங்களில், ஒன்றாம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மற்றும் குளச்சல் துறைமுகங்களுக்கு, எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகம், புதுச்சேரியில் வடக்கு கடலோர பகுதிகளில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.ஆந்திரா மற்றும் ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களுக்கு, கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும்போது, கடல் சீற்றமாக காணப்படும். வட கிழக்கில் இருந்து, தமிழகம், புதுச்சேரி கடற்பகுதியில், 55 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும்.எனவே, மீனவர்கள், நாளை வரை, வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிக்கு, மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. கடலுக்குள் இருக்கும் மீனவர்களும், உடனடியாக கரைக்கு திரும்ப, வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.