சீனாவை விட வேகமாக இந்தியாவால் வளர முடியும்: நீதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை
சீனாவை விட வேகமாக இந்தியாவால் வளர்ச்சியடைய முடியும் என்று நீதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நீதி ஆயோக் அமைப்புக்கும் சீனாவின் வளர்ச்சி ஆய்வு மையத்துக்கும் (டிஆர்சி) இடையிலான மூன்றாவது வருடாந்திரப் பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடைபெற்றது. அப்போது நீதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ்குமார் கூறியதாவது:
உலக அளவில் கடந்த 2008-இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு தற்போது முதல் முறையாக அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்றவற்றில் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இது உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீள்வதற்கு உகந்ததாகும்.
இந்தச் சூழ்நிலையில் உலகப் பொருளாதாரம் மீண்டு வருவதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இந்தியாவும், சீனாவும் தயாராக வேண்டும். இந்த இரு நாடுகளும் இணைந்து பாடுபடுவதும், வேகமாக வளர்வதற்கு ஒன்றுக்கொன்று உதவுவதும் மிகவும் முக்கியம். உலகிலும், ஆசியாவிலும் உள்ள சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது இந்தியா அடுத்த 30 ஆண்டுகளில் சீனாவைக் காட்டிலும் அதிக வளர்ச்சியை எட்ட வாய்ப்புள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி விகிதங்கள் இரட்டை இலக்கத்தை எட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக நம்புகிறார். ஏனெனில் உயர் வளர்ச்சி விகிதங்களால் மட்டுமே இந்தியாவிலும் சீனாவிலும் வறுமையை அகற்ற முடியும். 60 கோடிக்கும் மேற்பட்டோரை வறுமை நிலையில் இருந்து மீட்ட சீனாவின் சாதனையானது மனித குல வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்தியப் பொருளாதாரமும் மந்த நிலையில் இருந்து மீள வேண்டும். இதற்காக நாங்கள் உயர் விகித வேலைவாய்ப்பு வளர்ச்சியை எட்டுவதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
சீனாவில் கடந்த சில ஆண்டுகளில் பணியாளர்களின் ஊதியங்கள் ஆண்டுக்கு 14 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து வந்துள்ளது. இது சீன முதலீடுகள் இந்தியாவுக்கு வருவதால் நம் நாடு ஆதாயமடைய முடியும் என்பதற்கான அறிகுறியாகும். இவ்வாறு முதலீடுகள் வருவது இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இந்தியா வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். எங்களால் அதைச் சாதிக்க முடியும். அதன் மூலம் ஏழ்மை, ஊழல், பயங்கரவாதம், ஜாதீயவாதம், மதவாதம் உள்ளிட்டவற்றில் இருந்து விடுதலை பெறுவதிலும் சாதிக்க முடியும் என்றார் அவர்.