இயற்கை சீற்றங்களின் போது அரசை குறை சொல்லக்கூடாது: ஐகோர்ட்
இயற்கை சீற்றங்களின் போது அரசை குறை சொல்வது சரியாக இருக்காது என ஐகோர்ட் கூறியுள்ளது.ஒக்கி புயலால் மாயமான மீனவர்களை உடனடியாக தேடும் பணியை தீவிரபடுத்த உத்தரவிட வேண்டும் என மீனவர் நலன் அமைப்பு மற்றும் வழக்கறிஞர் சூரியபிரகாசம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களை மீட்கும் பணியை கடற்படை, கடலோர காவல்படை தீவிரபடுத்த வேண்டும். இயற்கை சீற்றங்களின் போது அரசை குறை கூறுவது சரியாக இருக்காது. இதனால் ஏற்படும் இழப்புக்கு நீதிமன்றங்கள் இழப்பீடு நிர்ணயம் செய்ய முடியாது. மீனவர்கள் மட்டுமின்றி , பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தது.