பள்ளிகளை இணைத்து சிறப்பு வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க நீதிமன்றம் உத்தரவு
ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளை இணைத்து சிறப்பு வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், அரசுப் பேருந்துகளில் படிக்கட்டுகள், ஜன்னல் ஓரங்கள் மற்றும் மேற்கூரைகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகள் தொடர்பாக முறையிட்டார். இதனை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி ஹேமலதா அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக பிரத்யேகமாக 250 பேருந்துகள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படுவதாக மாநகர அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் பள்ளிகளை இணைத்து சிறப்பு வழித்தடங்களை உருவாக்கி பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும் ஏற்கெனவே பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கூட்டம் அதிகமாக உள்ள பேருந்துகளில் மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.