குரூப் 4 தேர்வுக்கட்டணம் செலுத்தாதோருக்கு மீண்டும் வாய்ப்பு: யார்- யாருக்கு விலக்கு தெரியுமா..?
குரூப் 4 தேர்வுக்கு தவறுதலாக தேர்வுக்கட்டணச் சலுகை கோரியவர்கள், தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 13. தேர்வுக்கட்டணத்தை டிச.15-க்குள் செலுத்த வேண்டும்.
யார்- யாருக்கு விலக்கு...பழங்குடியினர், பட்டியல் வகுப்பினர், பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்), ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் இராணுவத்தினர் இரண்டு முறை தேர்வுக்கட்டண சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் அரசாணையின்படி, பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்ச்சி பெற்றிருந்தாலே, மூன்று முறை தேர்வுக்கட்டண சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் குரூப் 4 தேர்வுக்கு தவறுதலாக தேர்வுக்கட்டணச்சலுகை கோரி விண்ணப்பித்து, இப்போது தேர்வுக் கட்டணம் செலுத்த விரும்புபவர்கள் தங்களது விருப்பத்தினை மாற்றி தேர்வுக்கட்டணத்தை இணையவழியில் மட்டுமே செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இது பொருந்தாது.
ஒரு முறை வாய்ப்பு: இது ஒருமுறை வாய்ப்பாக மட்டுமே அளிக்கப்படும். இவ்வாறு தற்போது தேர்வுக்கட்டணச் சலுகையின் விருப்பத்தை மாற்றி தேர்வுக்கட்டணம் செலுத்துபவர்கள், அடுத்த தேர்வுகளுக்கு விருப்பத்தினை மாற்றி தேர்வுக்கட்டணச் சலுகையை மீண்டும் கோர முடியாது.
மேலும் தங்களது விருப்பத்தினை மாற்றிய பின் தேர்வுக்கட்டணம் செலுத்தாமலோ அல்லது தொழில்நுட்பக் காரணம் உட்பட பல்வேறு காரணங்களினால் தேர்வுக்கட்டணம் செலுத்த முடியாமல் போனாலோ அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
எனவே விண்ணப்பதாரர்கள் தாங்கள் செலுத்திய கட்டணமும் விண்ணப்பமும் தேர்வாணையத்தால் ஏற்கப்பட்டுள்ளதா, என்பதை தேர்வாணையத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தச் சலுகை கடந்த நவ.14-ஆம் தேதி வெளியான தொகுதி 4 அறிவிக்கை மற்றும் இதன் பின்னர் அறிவிக்கப்படும் அறிவிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.