ஐந்து லட்சம் கோடி நுண்ணுயிர்களை காப்போம்! : : இன்று உலக மண்வள தினம்
''மண்ணில் உள்ள 5 லட்சம் கோடி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பாதுகாத்து மண்ணை வளப்படுத்த வேண்டும்,'' என சிவகங்கை குன்றக்குடி வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் செந்துார்குமரன் தெரிவித்தார்.
உலக மண் வளதினத்தை முன்னிட்டு அவர் கூறியதாவது: மக்களுக்கு தேவையான உணவை தேவையான நேரத்தில் வழங்க முடியாத சூழ்நிலையில் உணவு தானிய உற்பத்தியை பெருக்க வேறுவழியின்றி உரம் அறிமுகமானது. பல்லாண்டு ஆராய்ச்சிக்கு பின்னரே பயிர்களுக்கு வேதியியல் உரங்களை பரிந்துரை செய்தாலும், நிர்ணயித்த அளவை தாண்டி ஒரு மில்லிகிராம் உரமும், ஒரு மில்லி லிட்டர் பூச்சி மருந்து தெளிப்பதன் மூலம் பயிர்கள், மண், மனிதர்களுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. காலப்போக்கில் மண் மலடாகிக்கொண்டு போவதை உலகிற்கு உணர்த்தி மீண்டும் மண்ணின் மாண்பை காத்திடத்தான் உலக மண்வள தினவிழாவை டிச.,5 ல் கடைபிடிக்கிறோம். மலடாகிப்போன மண்வளத்தை மீட்டெடுக்கும் வகையில் 'சர்வதேச ஒருங்கிணைந்த மண்ணியல் ஒன்றியம்' (ஐ.யூ.எஸ்.எஸ்.,) கடந்த 2002 ம் ஆண்டு மண்ணியல் ஆய்வை மேற்கொண்டது. தாய்லாந்து அரசு துணையோடு உலகளாவிய மண்ணின் மாண்பை இணைப்பவர்கள் என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தியது. உலக உணவு நிறுவனத்தின் தலைமையில் 'உலக மண்வள தினவிழா' ஆண்டுதோறும் ஒரு தலைப்பின் கீழ் கடைபிடிக்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்தது.
மண்ணும், பயறும் : அதன்படி 2015ல் சர்வதேச மண்வள ஆண்டு, 2016ல் சர்வதேச பயறு வகை ஆண்டு கடைபிடிக்கப்பட்டது. நடப்பு ஆண்டு மனிதன் வாழ்வில் மண்ணும், பயறு வகையும் என்ற தலைப்பில் உலக மண்வள தினத்தை கடைபிடிக்க உலக உணவு நிறுவனம் அறிவித்துள்ளது. மண்ணை பாதுகாக்க அன்றாடம் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் மட்டும் அக்கறை காட்டினால் போதாது. மண்ணோடு தொடர்புடைய நாம் அனைவரும் மண்ணை காக்க வேண்டிய கடமை உள்ளவர்கள் தான். சிற்றுண்டியில் பார்சல் உணவு வாங்கி சாப்பிட்ட பின் பாலிதீன் முதலான மக்காத அனைத்து பொருளையும் மண்ணில் வீசி மண்வளத்தை பாதிக்க செய்வதில் துவங்கி மண்ணுக்கு எதிரான செயலில் ஈடுபடும் அனைவரும் மண்ணை புண்ணாக்காமல், பொன்னாக்கும் முயற்சியை இன்று முதல் துவக்கவேண்டும். கூடுதல் உரம், பூச்சி மருந்து பயன்படுத்துவதை தவிர்த்து மண் வளம் காக்கவேண்டும்.
மண்ணின் கூறுகள் : மண், உயிர்களின் அடிப்படை ஆதாரம். இதில்இயற்கை தாதுக்கள், பலகோடி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளான பாக்டீரியா, பூஞ்சை காளான்கள், ஆல்கோ மற்றும் புரோட்டோசோவா, நுாற்புழுக்கள், மண்புழுக்கள், எறும்புகள் ஆகியவை இணைந்து மண்ணில் உயிர்வள தன்மையை காக்கிறது. இதன் எண்ணிக்கை குறையும் போது மண்மலட்டு தன்மை அடையும். இந்த உயிரிகள் மண்ணின் அங்கக சத்தை நிலைநிறுத்த வகை செய்யும். ஒரு தரமான பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் பெருக்கத்திற்கும் மண்ணில் அங்கக கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து 24:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். இந்த 24ல் 16 பகுதியை நுண்ணுயிரிகள் சக்திக்காகவும், 8 பகுதிகளை இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்தலாம். ஆனால் தற்போது இந்தியாவில் அதிகமான செயற்கை உரங்களின் பயன்பாடு காரணமாக மண்ணில் கரிமச்சத்து 10க்கு கீழும், தழைச்சத்து 0.28 ம் உள்ளது. இதனால் மண்வளம் குறைந்து மலடாகும் அபாய தன்மை உள்ளது. இதையறிந்து தேவையற்ற நேரத்திற்கு உரமிடல், பரிந்துரைத்த அளவை தாண்டி தெளித்த உரம், வேளாண்மை விதியை தளர்த்திய வெள்ளாண்மை முறையை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தி மண்ணில் உள்ள 5 லட்சம் கோடி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பாதுகாத்து மண்ணை வளப்படுத்தவேண்டும், இவ்வாறு கூறினார்.
சந்தேகங்களுக்கு 94438 69408ல் தொடர்பு கொள்ளலாம்.