டிச. 10ல் மாவட்டங்களில் உண்ணாவிரதம் ஜாக்டோ- ஜியோ கிராப் அறிவிப்பு
கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.,10ல் மாவட்ட தலைநகரங்களிலும், வருகிற ஜன., 6ல் உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்படும்' என ஜாக்டோ -ஜியோ, கிராப் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் வின்சென்ட் பால்ராஜ் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் ஜாக்டோ- ஜியோ கிராப் கூட்டமைப்பின் செயல் திட்ட விளக்க கூட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்த சாரதி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகர், சின்னச்சாமி, கணேசன் முன்னிலை வகித்தனர்.
மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் வின்சென்ட் பால்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:அரசு ஊழியர், ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும்.
ஊதியக்குழு அறிவிப்பில் இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஊர்தி ஓட்டுனர்கள், தலைமைச்செயலக ஊழியர்கள் என 16 வகை பிரிவினர் ஊதியக்குழு முரண்பாடு களையப்படாததால் கடும் பாதிப்பிற்குள்ளாகி
உள்ளனர்.குறைந்த பட்ச ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 என்று இருப்பதை மத்திய அரசு போல ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். எங்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை, குழுவிடம் அறிக்கை பெற்று நடைமுறைப்படுத்துவோம் என தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்து இருந்தார். இக் கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நேற்று செயல் விளக்க கூட்டம் நடத்தியுள்ளோம். இதனை வலியுறுத்தி டிச., 10 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதமும், ஜன., 6 ம் தேதி சென்னையில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டமும் நடத்த
உள்ளோம், என்றார். பொது சுகாதாரத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜா, அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில பொருளாளர் வெங்கடேசலு, பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சலேத்ராஜா, தலைமையாசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் அமல்ராஜ், அரசு பணியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன், பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக செயலாளர் பாண்டி பங்கேற்றனர்.