ஜி.எஸ்.டி.,யில் பதிவு: தமிழகத்தில் 6 லட்சம் பேர்
தமிழகத்தில் இதுவரை, ஆறு லட்சம் வணிகர்கள், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக, வணிக வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரிக்கு, ஏராளமான வணிகர்கள், பதிவு செய்து வருகின்றனர். மதிப்புக் கூட்டு வரி எனும், 'வாட்' அமலில் இருந்தபோது, மாதத்திற்கு, 10 ஆயிரம் பேர், பதிவு செய்வர்.
ஆனால், ஜி.எஸ்.டி., வந்த பின், மாதத்திற்கு, 20 ஆயிரம் பேர் வரை பதிவு செய்கின்றனர்.
அதற்கு, ஜவுளித்துறை, பெரிய ஓட்டல்கள் உள்ளிட்ட சில துறைகள், ஜி.எஸ்.டி.,யின் கீழ் வந்திருப்பதே காரணம்.
மாநில வணிக வரித்துறையில், இதுவரை, மூன்று லட்சம் வணிகர்கள், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்துள்ளனர். இதே எண்ணிக்கையில், மத்திய, ஜி.எஸ்.டி., துறை அலுவலகத்திலும், வணிகர்கள் பதிவு செய்துள்ளனர். அதனால், இதுவரை, தமிழகத்தில், ஆறு லட்சம் வணிகர்கள் பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும், 2.5 கோடி வணிகர்கள், ஜி.எஸ்.டி., குடையின் கீழ் வந்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்