மனுநீதி நாள் முகாமில் பங்கேற்க அரசு பஸ்சில் சென்ற கலெக்டர்
மனுநீதி நாள் முகாமில் பங்கேற்பதற்காக, கடலுார் கலெக்டர், சக அதிகாரிகளுடன், அரசு பஸ்சில் பயணித்தார். கடலுார் மாவட்டத்தில் நடக்கும், மனுநீதி நாள் முகாம்களில் பங்கேற்க, கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள், காரில் செல்வது வழக்கம். கடலுாரில் இருந்து, 65 கி.மீட்டரில் உள்ள, ஸ்ரீமுஷ்ணம் அடுத்த, கொழை கிராமத்தில் நேற்று, மனுநீதி நாள் முகாம் நடந்தது. இதில் பங்கேற்க, அரசு பஸ்சில் செல்வது என, கடலுார் கலெக்டர், பிரசாந்த் வடநேரே முடிவு செய்தார். கலெக்டரின் முகாம் அலுவலகத்திற்கு, காலை, 8:15 மணிக்கு, அரசு பஸ் வரவழைக்கப்பட்டது. கலெக்டர், பிரசாந்த் வடநேரே, 50 துறைகளின் அதிகாரிகளுடன், கொழை கிராமத்திற்கு, அரசு பஸ்சில் புறப்பட்டு சென்றார். மனுநீதி நாள் முகாமில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்; நலத்திட்ட உதவிகளையும் வழங்கியவர், அதே பஸ்சில், மீண்டும் கடலுார் திரும்பினார். கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கான டிக்கெட் கட்டணத்தை, மாவட்ட நிர்வாகமே செலுத்த உள்ளது.
கலெக்டர், பிரசாந்த் வடநேரே கூறியதாவது: மனுநீதி நாள் முகாமில் பங்கேற்க, அதிகாரிகள், தனித்தனி காரில் செல்வது தவறு கிடையாது. ஆனால், குறுகிய இடத்தில், 50க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் வாகனங்களை நிறுத்துவதில், சிரமம் ஏற்படுகிறது. மாதம் ஒருமுறை நடக்கும் முகாமில், கலெக்டர் மற்றும் அதிகாரிகள், மக்களின் பிரச்னைக்கு தீர்வு காண, பஸ்சில் செல்வது நல்லது. பொதுமக்கள் பயன்படுத்தும் அரசு பஸ்களில் அதிகாரிகள் செல்வதால், அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். பெட்ரோல், டீசல் செலவையும் மிச்சப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.