பாரதிதாசன் பல்கலை விதிமீறல்கள் : கவர்னரிடம் சிண்டிகேட் புகார்
திருச்சி, பாரதிதாசன் பல்கலையில் துணை வேந்தர் இன்றி, விதிகளை மீறி, உயர் பதவிகளை நிரப்ப முடிவு செய்துள்ளதாக, கவர்னருக்கு, பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர்.பாரதிதாசன் பல்கலையில், கடந்த, ஜூன், 12 முதல், துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. புதிய துணை வேந்தரை நியமிக்க, தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், 241 பேர் விண்ணப்பித்துள்ளனர். விரைவில், புதிய துணை வேந்தர் நியமிக்கப்பட உள்ளார். பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் தொலைநிலை கல்வி இயக்குனர் பதவிகளும் காலியாக உள்ளன. இந்நிலையில், கவர்னர், பன்வாரிலால் புரோஹித்துக்கு, பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினர்கள், புகார் அனுப்பியுள்ளனர்.
அதில் கூறியுள்ளதாவது: துணை வேந்தர் பணியிடம் காலியானதும், அன்றாட நிர்வாகத்தை கவனிக்க, தற்காலிக கமிட்டி அமைக்கப்படுவது வழக்கம். சிண்டிகேட் உறுப்பினராக இருந்த, உயர் கல்வி செயலர், சுனில் பாலிவால், தன்னையே தற்காலிக கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். அவர், பாரதிதாசன் பல்கலையில் நடந்த, எந்த சிண்டிகேட் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், அக்., 6ல், பல்கலை வளாகத்தில் சிண்டிகேட் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திடீரென சென்னை, தலைமை செயலகத்திற்கு மாற்றப்பட்டது; நான்கு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். அவர்களிலும், இரண்டு பேரின் பதவிக் காலம், அக்., 10ல் முடிந்து விட்டது. மற்ற உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில், அந்த கூட்டத்தில், சில முக்கிய பணிகளுக்கு, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் தொலைநிலை கல்வி இயக்குனரை, புதிதாக தேர்வு செய்ய, டிச., 12ல், அடுத்த சிண்டிகேட் கூட்டம் அறிவித்துள்ளனர். புதிய அதிகாரிகளை தேர்வு செய்யும் கமிட்டியில், பேராசிரியர், ரவிச்சந்திரன், உதவி பேராசிரியர், சிவராமகிருஷ்ணன் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர் அல்லாத, எஸ்.சேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இது, முற்றிலும் விதியை மீறிய செயல். சிண்டிகேட் உறுப்பினர்களின் அனுமதியின்றி, உயர் கல்வி செயலர், சுனில் பாலிவால் சார்பில், ஒரு தலைபட்சமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இதில் கவர்னர் தலையிட்டு, இந்த விதிமீறல்கள் குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, அதிகாரம் இல்லாத தற்காலிக கமிட்டி, பல்கலையின் உயர் பதவி நியமனங்களை மேற்கொள்ள, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.