ஆன்லைன் தொழில் அனுமதி அரசு அறிவித்த திட்டம் முடக்கமா?
தொழிற்சாலைகளுக்கான அனைத்து அனுமதிகளையும், இணையதளம் வாயிலாக வழங்கும் திட்டம், முதல்வர் துவக்கி வைத்த ஒரு மாதத்திற்குள் முடங்கியதா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
'ஆன்லைன்' தொழில்,அனுமதி ,அரசு அறிவித்த, திட்டம் முடக்கமா?
தொழில் வளர்ச்சி பெற்ற பல மாநிலங்கள், புதிய ஆலைகளுக்கு பல்வேறு வகை அனுமதிகளை, 'ஆன்லைன்' வாயிலாக வழங்குகின்றன. ஆனால், அந்த வசதி, தமிழகத்தில் இல்லாத தால், முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் பின்தங்கியது. அதையடுத்து, அந்த வசதிகள் அளிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
ஓராண்டு இழுபறிக்கு பின், அந்த திட்டத்தை, நவ., 2ல், முதல்வர் துவங்கி வைத்தார். அதற்காக, அவசர சட்டமும் பிறப்பிக்க பட்டது.
இதையடுத்து,www.easybusiness.tn.gov.in. என்ற இணையதளத்தில், ஒரு மனுவை தாக்கல் செய் தால் போதும்; 37 வித சேவைகள் மற்றும் தொழில் அனுமதிகளை, ஒரு மாதத்திற்குள் பெறலாம் என்ப தால், தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அந்த அவசர சட்டத்தை காற்றில் பறக்க விட்டு, சில தினங்களுக்கு முன், ஒரு நிறுவனத் திற்கு அனுமதி தர, அனைத்து துறை அதிகாரி களையும் அழைத்து, கூட்டம் நடத்தி, ஒப்புதல் தரப்பட்டு உள்ளது.
இதர துறை அதிகாரிகள் கூறியதாவது:
அனைத்து அனுமதிகளும், ஆன்லைனில் தரும் திட்டம் அறிமுகம் ஆனதால், வழக்கமாக நடக்கும் கூட்டத்திற்கு, போக தேவையில்லை என, கருதி னோம். ஆனால், ஒரு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி தருவதற்காக, எங்களை நேரில் வரும்படி அழைத்தனர். ஆன்லைனில் அனுமதிதரும் திட்டம், இன்னும் ஏட்டளவில் தான் உள்ளது. இம்முறையும், பட்டியலில் நாம் பின்தங்குவது உறுதி.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொழில்துறையினர் கூறியதாவது:
அனைத்துதொழில் அனுமதிகளையும், ஆன்லைனில் பெறுவதாக இருந்தால், எந்த துறைஅலுவலகத்துக்கும், தொழில் துறையினர், நேரில் செல்லத் தேவையில்லை. மற்ற துறை யினரும், 'சிங்கிள் விண்டோ' கூட்டத்திற்கு வர தேவையில்லை. ஆனால், சில அதிகாரிகள், ஆன்லைன் திட்டத்தால், தங்களுக்கு பயன் கிடைக்காது என நினைத்து, பழைய முறையின் படி கூட்டத்தை கூட்டி, அனுமதி தந்துள்ளனர்.
அந்த நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கும் நிறுவனத்துடன்,ஏற்றுமதி தொழில் மேம்பாட்டு நிறுவன அதிகாரி ஒருவர், மறைமுக கூட்டு வைத்திருப்பதே காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.