டிச., 1 முதல் வரப் போகுதாம் கன மழை!
'வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், டிச., 1 முதல், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், கன மழை கொட்டும்' என, வானிலை மையம் கூறியுள்ளது.
டிச.1,கன மழை,வானிலை மையம்
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், ஸ்டெல்லா கூறியுள்ளதாவது: வட கிழக்கு பருவ மழை, தமிழகத்தில் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், புதுச்சேரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், கடலோர பகுதிகளில், இரு தினங்களாக, கன மழை பெய்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
நேற்றைய நிலவரப்படி, வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமாகி, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, கேரளா அருகே, அரபிக் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது. அதேநேரம், வங்கக் கடலின் தென் மேற்கில், தமிழகம், இலங்கை இடையே,
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.அதனால், தமிழகம் மற்றும் புதுவையில், கடலோர பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்யும். சென்னை உட்பட கடலோர நகரங்களில், சில இடங்களில், கன மழை பெய்யலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டிச., 1 முதல், படிப்படியாக கன மழை
இதற்கிடையில், 'வங்கக் கடலில், அந்தமான் அருகே, காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் உருவாகும். இது, தமிழகத்தின் வட கிழக்கு கடலோர மாவட்டங்களான, கடலுார், நாகை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும். அதனால், வரும், 30ம் தேதி முதல், தமிழக கடலோர மாவட்டங்களில், மிதமான மழை துவங்கும். டிச., 1 முதல், படிப்படியாக கன மழையாகி, டிச., 5 வரை தொடர்ந்து பெய்யும்' என, இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
ராமேஸ்வரத்தில் 14 செ.மீ., மழை : நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, கடந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, ராமேஸ்வரத்தில், 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம், 12; சென்னை விமானநிலையம், சீர்காழி, 10; காஞ்சிபுரம், 9; வேதாரண்யம், 8; பூந்தமல்லி, கொளப்பாக்கம், சிதம்பரம், 7 செ.மீ., மழை பெய்துள்ளது.