பஞ்சாயத்து தலைவராக கல்வித் தகுதி கட்டாயம்
பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவோருக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்கும்படி, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுத உள்ளதாக, மத்திய அமைச்சர் மேனகா தெரிவித்தார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான மேனகா, டில்லியில் நடந்த பெண் பஞ்சாயத்து தலைவர்களுக்கான நிகழ்ச்சியில் பேசியதாவது:
பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு போட்டியிடுவோருக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்து, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் சட்டத் திருத்தம் இயற்றின. முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது மிகச் சிறந்த திட்டம் என்பது தற்போது உணரப்படுகிறது. இதுபோன்ற சட்ட திருத்தத்தை இயற்றும்படி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.