நீதிபதிகள் சம்பளம் உயர்வு : அமைச்சரவை ஒப்புதல்
உச்ச நீதிமன்றம் மற்றும் 24 உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான சம்பளத்தை உயர்த்துவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தில், 31 நீதிபதிகள் பணியிடங்களும்; 24 உயர் நீதிமன்றங்களில், 1,079 நீதிபதிபணியிடங்களும் உள்ளன.
நீதிபதிகளுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டு மென, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த, டி.எஸ்.தாக்குர், கடந்தாண்டு, அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தற்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, 1.5 லட்சம் ரூபாய் மாத சம்பளம் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு அதைவிட குறைவான சம்பளம் கிடைத்து வருகிறது.
புதிய உத்தரவின்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கான மாத சம்பளம், 2.80 லட்சம்ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கான சம்பளம், 2.50 லட்சம் ரூபாயாக உயரு கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான மாத சம்பளம், 2.25 லட்சம் ரூபாயாக உயரும்.
இந்த சம்பள உயர்வு மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கான ஓய்வூதியம் ஆகியவை, 2016 ஜன., 1ல் இருந்து, முன்தேதியிட்டு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தவிர, மத்திய பொதுத் துறை நிறுவனங்களில், ஊழியர்களுக்கான சம்பளத்தை திருத்தி அமைக்கும் கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை, ஒப்புதல் அளித்தது.
''வரிகளை மத்திய, மாநில அரசுகள் இடையே பகிர்ந்து கொள்வது தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதற்காக, 15வது நிதி கமிஷன் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
''நிதி கமிஷனின் உறுப்பினர்கள் உள்ளிட்ட விபரங்கள், பின் அறிவிக்கப்படும்,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்தார்.