பிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அரசாணையில் திருத்தம்
பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வுடன், செய்முறை தேர்வும் நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட்; தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, ஜே.இ.இ., என்ற நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
பிளஸ் 1 பொதுத் தேர்வு : இந்த தேர்வுகளுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளில் இருந்தும் கேள்விகள் இடம் பெறும். பிளஸ் 1 பாடத்தை பெரும்பாலான பள்ளிகள் நடத்தாததால், இந்த நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுவது, மிக கடினமாக உள்ளது. எனவே, பிளஸ் 1, பிளஸ் 2 என, இரண்டு வகுப்பு பாடங்களுக்கும், சம அளவு முக்கியத்துவம் தர முடிவு செய்யப்பட்டு, இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையில், செய்முறை தேர்வு, பிளஸ் 2 வகுப்பில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிளஸ் 2 பொது தேர்வின் போது, பிளஸ் 1க்கும் சேர்த்து, செய்முறை வகுப்புகள் நடத்துவதில், நடைமுறை சிக்கல்கள் ஏற்படும்; மாணவர்களுக்கும் சுமை கூடும் என, கல்வியாளர்கள் மற்றும் பள்ளிகள் தரப்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
கல்வித்துறை முடிவு : இதையடுத்து, பிளஸ் 1 வகுப்புக்கு, அதே ஆண்டில், பொது தேர்வுடன், செய்முறை தேர்வையும் இணைத்து நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான, திருத்திய அரசாணையை, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.
இதன்படி, பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொது தேர்வையொட்டி, செய்முறை தேர்வும் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேதி, அரையாண்டு தேர்வுக்கு பின் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.