பூமிதான இயக்கத்தில் வழங்கிய 28 ஆயிரம் ஏக்கருக்கு சிக்கல்
தமிழகத்தில் பூமிதான இயக்கத்தில் வழங்கப்பட்ட 28 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பிரச்னையாக இருப்பதால், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
காந்தியடிகளின் சீடராக இருந்தவர் வினோபாவே. ''கிராமங்களில் உள்ள ஏழை மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக வசதியானவர்கள், அதிகளவு நிலம் உள்ளவர்கள் இயன்ற அளவு பூமி தானம் இயக்கத்திற்கு நிலங்களை இலவசமாக தர வேண்டும், என்றார்.
இதனால் பலரும் மனமுவந்து நிலங்களை பூமி தான இயக்கத்திற்கு வழங்கினர். இவ்வகையில் தமிழகம் முழுவதும் 28 ஆயிரம் ஏக்கர் நிலம் தரப்பட்டுள்ளது. இதில் மதுரையில் ஆயிரத்து 200 ஏக்கரும், கோவையில் ஆயிரத்து 500 ஏக்கரும், திண்டுக்கல்லில் 3 ஆயிரத்து 300
ஏக்கரும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பூமிதான இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்ட நிலங்களில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.பூமி தான இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. பல இடங்களின் உரிமையாளர்கள்
'எங்கள் தாத்தா தெரியாமல் கொடுத்து விட்டார். இந்த இடம்தான் எங்களுக்கு ஜீவதாரம்' என வழக்குகளும் தொடுத்துள்ளனர். இதனால் இந்த இடங்களை மீட்பதில் அதிகாரிகள் திணறி
வருகின்றனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: 1958 ம்ஆண்டுகளில் நிலத்திற்கு இவ்வளவு மதிப்பு கிடையாது. காடு, மேடுகளாக, பாறைகளாக இருந்த இடத்தை பூமி தான இயக்கத்திற்கு கொடுத்தனர். தற்போது அந்த இடங்களில் நான்கு வழிச்சாலை உட்பட முக்கிய பகுதிக்குள் வருவதால் நிலத்தின் மதிப்பு பலமடங்கு அதிகரித்துவிட்டது. பாறைகளாக இருந்த இடங்களில் கிரானைட் கற்களை உடைத்து விற்பனை செய்கின்றனர். இதை பார்க்கும் வாரிசுகள் இடத்தை மீட்பதற்காக போராடுகின்றனர். இவர்களிடம் நாங்கள் போராட வேண்டியுள்ளது, என்றார்.