எல்.இ.டி., பல்பு பழுதானால் தபால் ஆபீசில் மாற்ற ஏற்பாடு
''எல்.இ.டி., பல்புகள் பழுதானால், தலைமை தபால் அலுவலகத்தில் மாற்றிக் கொள்ளலாம்,'' என, வேலுார் மண்டல மின் வாரிய செயற்பொறியாளர், வெங்கடேசன் கூறினார்.
தமிழகம் முழுவதும், மின் சிக்கனத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், மின் வாரிய அலுவலகங்களில், 70 ரூபாய்க்கு, எல்.இ.டி., பல்பு, 220 ரூபாய்க்கு டியூப் லைட் செட், 1,200 ரூபாய்க்கு மின் விசிறி என, மூன்று ஆண்டுகள் வாரன்டியுடன் விற்பனை செய்யப்படுகின்றன.
வெளி மார்க்கெட்டை விட, இங்கு விலை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். இந்த பொருட்கள் பழுதானால், தலைமை தபால் அலுவலகத்தில் மாற்றிக் கொள்ளலாம் என, மின் வாரிய அதிகாரிகள் கூறிஉள்ளனர்.
வேலுார் மண்டல மின் வாரிய செயற்பொறியாளர், வெங்கடேசன் கூறியதாவது:
மின் வாரியத்தில் குறைந்த விலையில் விற்கப்படும், எல்.இ.டி., பல்பு, டியூப் லைட், மின் விசிறிகளுக்கு, மூன்று ஆண்டுகள் வாரன்டி வழங்கப்படுகிறது. வாங்கும் பொருட்கள் பழுதானால், ஜன., வரை, எந்த மின் வாரிய அலுவலகத்தில் வாங்கப்பட்டதோ, அங்கு மாற்றிக் கொள்ளலாம். அதன்பின் பழுதானால், வேலுார் தலைமை தபால் அலுவலகத்தில், உரிய ரசீதை காண்பித்து மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.