கட்டாய அசல் ஓட்டுநர் உரிம உத்தரவை ரத்துச் செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, இதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் அகில இந்திய கூட்டமைப்பு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள் தங்களது அசல் ஓட்டுநர் உரிமத்தை செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அசல் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கத் தேவையில்லை. அதிகாரிகள் கேட்கும்பட்சத்தில் 15 நாள்களுக்குள் அவற்றைச் சமர்ப்பித்தால் போதும் என உள்ளது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரமைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், 'கூடுதல் டிஜிபி போக்குவரத்து பாதுகாப்புக்காகவும், விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் பொதுநல நோக்கில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டால், அது பொதுநலனுக்கு எதிரானதாக மாறிவிடும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவதால்தான் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.
அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு. எனவே அதில் தலையிட முடியாது' எனக் கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.