புதுச்சேரி பல்கலையில். அத்துமீறி நுழைபவர்களை கைது செய்ய உத்தரவு
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அத்துமீறி நுழைபவர்களை காவல் துறையினர் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் வினோத், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியான சூழ்நிலை அமைய உத்தரவிட வேண்டும்' எனக் கோரி இருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் பிரச்னைகள் தொடர்பாக மாநில காவல்துறை டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி மாநில காவல்துறை டிஜிபி சுனில்குமார் கெளதம் மற்றும் சிறப்பு காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் நேரில் ஆஜராகி பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, நீதிபதி இந்த வழக்கில் காவல்துறை டிஜிபி, சிறப்பு காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக விலக்களித்து பிறப்பித்த உத்தரவில், 'பல்கலைக்கழகத்தில் காவல்துறை பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். வளாகத்துக்குள் உரிய அடையாள அட்டை இல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், பல்கலைக்கழகத்துக்கு தொடர்பு இல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது.
அத்துமீறி நுழைபவர்களை காவல் துறையினர் கைது செய்யலாம். மேலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி, பல்கலைக்கழக பாதுகாப்புக்காக இரு நபர் குழுவை அமைக்க வேண்டும் என்பதால், மானியக் குழுவை இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை வரும் 24 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.