எல்லையை கடந்தது காற்றழுத்த பகுதி : மழைத்துளிக்கு சிறிய இடைவெளி
சென்னை உள்ளிட்ட வடகிழக்கு கடலோர மாவட்டங்களை மிரட்டிய, காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக எல்லையை கடந்து விட்டது. அதனால், தமிழகத்திற்கு கனமழையில், சிறிது இடைவெளி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், அக்., 29 முதல், நவ., 4 வரை தொடர்ச்சியாக, கனமழை பெய்ததால், நீர்நிலைகளில் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. மழையின் தொடர்ச்சியாக, சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில், வெள்ளப்பெருக்கும், ஏரிகள் உடைப்பும் ஏற்பட்டன. நீர்நிலை பகுதிகளில் அமைந்த, குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.
பின், நவ., 10 முதல், சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களை, மீண்டும் கனமழை மிரட்டிய நிலையில், நவ., 14ல் முடிவுக்கு வந்துள்ளது. வங்க கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்றது. அதனால், இன்னும் மழை தொடர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்படுமோ என, சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் அச்சத்தில் இருந்தனர்.
ஆனால், காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடற்பகுதியை கடந்து, ஆந்திரா, ஒடிசா இடையே நகர்ந்து விட்டது. அதனால், இருள் சூழ்ந்த மேக மூட்டத்துடன், சென்னையை மிரட்டிய மழைத்துளிகளுக்கு, சிறிய இடைவெளி கிடைத்துள்ளது. இன்று பகல் வரையிலான, வானிலை முன் அறிவிப்பில், கனமழை எச்சரிக்கை விடப்படவில்லை.
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், நேற்று கூறுகையில், ''மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஆந்திரா மற்றும் ஒடிசா அருகே நகர்ந்து விட்டது. அதனால், தமிழகத்திற்கு மழை பாதிப்பு இருக்காது. தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில் மிதமான மழைக்கு மட்டும் வாய்ப்புள்ளது,'' என்றார்.
இதனிடையே, 'ஆந்திரா கடல் பகுதி பக்கம் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுங்கள்' என, அறிவுறுத்தும் வகையில், சென்னை, கடலுார், நாகை, துாத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில், முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நேற்று காலை, 8:30 மணி வரையிலான, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, தஞ்சாவூரில், 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.