“தமிழ் இலக்கியங்கள் நமது ஆதிப்பெருமைகளின் ஆதாரங்கள்” கவிஞர் வைரமுத்து பேச்சு
“இனத்தின் அடையாளங்களை இந்த தலைமுறையினர் அறியவேண்டும்” என்றும், “தமிழ் இலக்கியங்கள் நமது ஆதிப்பெருமைகளின் ஆதாரங்கள்” என்றும், சென்னையில் நடந்த விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார்.
‘தினமணி’ பத்திரிகை சார்பில் ‘கருமூலம் கண்ட திருமூலர்’ என்ற தலைப்பில் இலக்கிய விழா, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் 14-11-2017 அன்று நடந்தது. இந்த விழாவுக்கு, ‘தினமணி’ பத்திரிகை ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை தாங்கினார். விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
முன்னோடிகளைக் கொண்டாடும் இனத்திற்குத்தான் வரலாற்றுத் தொடர்ச்சி வாய்க்கும். ஆனால் தொழில்நுட்ப யுகம் திறந்துவிட்டிருக்கும் இந்தத் துய்ப்புக் கலாசாரத்துக்குள் நம் பெருமைகளும் பெருமிதங்களும் மறக்கப்பட்டுவிடுமோ...? என்ற இலக்கியக் கவலை என் இதயத்தை அரிக்கிறது.
அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த முன்னோடிகளைக் கடந்த ஈராண்டுகளாகத் தோண்டி எடுத்துத் துடைத்து வழங்கிக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இந்தத் தலைமுறை தனது இனத்தின் அடையாளங்களை அறிந்துகொள்ள வேண்டும்.
மரத்தின் வயது என்னவென்று ஆண்டு வளையங்களைக் கொண்டு அறியலாம். மாட்டின் வயது என்னவென்று அதன் பற்களைக் கொண்டு அளவிடலாம். மலையின் வயது என்னவென்று அது வெளியிடும் கார்பன் அளவை வைத்துக் கணக்கிடலாம். ஓர் இனத்தின் வயதை நாகரிகத்தை, தத்துவச் செழுமையை அதன் இலக்கியங்களைக்கொண்டே அறிய முடியும். தமிழ் இலக்கியங்கள் நமது ஆதிப்பெருமைகளின் ஆதாரங்கள். அவைகளைக் கொண்டாட வேண்டும்.
அண்மையில் எகிப்துக்குப் போயிருந்தேன். பிரமிடுகளும், நைல் நதியும்கூட எனக்குப் பிரமிப்பை ஏற்படுத்தவில்லை. 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ராஜ குடும்பத்தின் உடல்களையும், உடைகளையும், ஆயுதங்களையும், ஆபரணங்களையும் பாதுகாத்து வரும் கண்காட்சி கண்டே நான் வியந்து நின்றேன். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செத்த பொருட்களையே அவர்கள் பாதுகாத்து வைத்திருக்கிறார்களே, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் இலக்கியங்களாகிய உயிர்ப் பொருள்களை நாம் பாதுகாத்து வைக்கிறோமா? என்ற கேள்வி என்னைக் கிழித்துப்போட்டது.
பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே மூச்சுப் பயிற்சி சொன்ன முதல் தமிழர் திருமூலர். ‘காற்றைப் பிடிக்கும் கணக்கு’, என்று சுவாசத்திற்குச் சூத்திரம் சொன்னவர் திருமூலர். 16 நொடிகள் மூச்சை இழுத்து, 64 நொடிகள் அதை உள்ளே இருத்தி, 32 நொடிகள் அதை மெல்ல மெல்ல வெளிவிட்டால் நோயும் மூப்பும் உடலை அண்டாது என்று கண்டு சொன்னவர் திருமூலர்.
இதைத்தான் இன்று ‘யோகா’ என்று உலகம் கொண்டாடுகிறது. யோகப் பயிற்சிக்கு மூலம் தந்தவரே திருமூலர்தான். இந்தப் பெருமைகளையெல்லாம் அறியாமல் தமிழர்கள் ரேஷனையும் ஈசனையும் நம்பி மட்டுமே காலம் கழிக்கிறார்கள். நாடு மாறவேண்டும். இலக்கியமும் குடும்ப அட்டைகளின் கொள்முதல் பொருளாய் ஆகவேண்டும்.
நமக்கு நம் பெருமைகளை ஆவணப்படுத்த ஒரு காலக் கருவூலம் வேண்டும். ஆதி முதல் இன்றுவரை தமிழர்கள் கடந்துவந்த கலை, இலக்கியம், கலாசாரம், வாழ்வியல், நிலவியல் குறித்த ஒரு கண்காட்சி வேண்டும். மத்திய - மாநில அரசுகள் அதை நிறுவ வேண்டும். ஆனால் மாநில அரசு மட்டுமே அதைப் பராமரிக்க வேண்டும். உலகமயமாதல் என்ற புயல் தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்க எத்தனிக்கும் இந்த வேளையில் இதைக் காலத்தின் தேவை என்று கருதுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.