குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர்
குழந்தைகள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தினார்.
குழந்தைகள் தினத்தையொட்டி (நவ.14), மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு அவர் அனுப்பிய செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
நமது நாட்டின் எதிர்காலம் குழந்தைகள். அவர்களின் நலனுக்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். இளமைக் காலத்தில் அவர்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்குத் தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் மலர்வதற்காகக் காத்திருக்கும் மொட்டுகள் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14-ஆம் தேதி, ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.
புத்தாக்கம், கல்வி, விளையாட்டு, கலை, கலாசாரம், சமூக சேவை, இசை ஆகிய துறைகளில் சாதனை புரிந்து சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கு அவர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.